படைப்புழுவை ஒழிக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு

படைப்புழுவை ஒழிக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு

by Staff Writer 22-01-2019 | 8:25 AM
Colombo (News 1st) படைப்புழுவை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ளவுள்ளதாக, விவசாய அமைச்சர் பி ஹரிசன் தெரிவித்துள்ளார். படைப்புழுவை ஒழிப்பதற்கு எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் நேற்றைய தினம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது, அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக அமைச்சர் பி ஹரிசன் குறிப்பிட்டுள்ளார். இதற்கான நிதியை விரைவில் பெற்றுக் கொடுப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மேலதிக பரிசோதனைகளுக்காக படைப்புழுவின் மாதிரியை அமெரிக்க பல்கலைக்கழகத்திற்கு அனுப்பியுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் சோளம் உள்ளிட்ட சில துணைப் பயிர்செய்கையை படைப்புழுக்கள் அதிகளவில் தாக்கியுள்ளது. சுமார் நூறு வகையான பயிர்செய்கையை படைப்புழு தாக்கக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, சோளப் பயிர்ச்செய்கைகளில் வேகமாகப் பரவிவரும் படைப் புழுவின் தாக்கம் தற்போது வட மாகாணத்திலும் பரவி வருகின்றது. அத்தோடு, முல்லைத்தீவு மாவட்டத்தில் முதன்முறையாக படைப்புழுவின் தாக்கம் தொடர்பில் பதிவாகியுள்ளது. முல்லைத்தீவின் கொக்குளாய், குமுலமுனை மற்றும் கொக்குதொடுவாய் போன்ற பகுதியில் சோளப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படுகின்றது. குறித்த பகுதியில் உள்ள சோளப் பயிர்ச்செய்கையிலேயே படைப்புழு தாக்கம் செலுத்தியுள்ளது. அதேநேரம், கிளிநொச்சி மாவட்டத்தின் பளை, செல்வபுரம் போன்ற பகுதிகளிலும் படைப்புழுவின் தாக்கம் பரவியுள்ளது. இதேவேளை, படைப்புழுவை ஒழிப்பதற்கு தேவையேற்படும் பட்சத்தில் இராணுவத்தின் உதவியைப் பெற்றுக்கொள்வதாக புத்தசாசன மற்றும் வட மேல் அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டதன் பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில், அலரிமாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படைப்புழுவை ஒழிப்பது தொடர்பில் அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து ஊடகவியலாளர்கள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேராவிடம் கேள்வியெழுப்பினர்.
இராணுவத்தின் ஒத்துழைப்பைப் பெற்றுக்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளோம். அத்துடன், செய்கை பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு 45,000 ரூபா வீதம் இழப்பீடு வழங்குவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. அனைவரும் ஒன்றிணைந்தே இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளோம். நாளொன்றுக்கு 100 கிலோமீற்றர் வரை அந்த படைப்புழு பறக்கின்றது. ஆகவே, இது மிகவும் அபாயகரமானது. படைப்புழு மேலும் பரவாமல் தடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம்
என அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.