கப்பல்களில் பரவிய தீ: 11 பேர் உயிரிழப்பு

கப்பல்களில் பரவிய தீ: 11 பேர் உயிரிழப்பு

by Chandrasekaram Chandravadani 22-01-2019 | 6:54 AM
க்ரைமியாவின் கேர்ச் ஸ்ரைட் இற்கு (Kerch Strait) அருகே கருங்கடலில் இரு சரக்குக் கப்பல்கள் தீப்பற்றியதில் குறைந்தது 11 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தன்ஸானியாவுக்குச் சொந்தமான இரண்டு சரக்குக் கப்பல்களே இவ்வாறு தீப்பற்றியுள்ளன. குறித்த கப்பல்கள் தீப்பற்றியவுடன், தற்பாதுகாப்புக்காக கடலில் குதித்தவர்களை மீட்கும் பணிகளில் ரஷ்ய மீட்புப் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்தநிலையில், இதுவரையில் 14 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எரிவாயு தாங்கியான ஒரு கப்பலில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தையடுத்து, மற்றைய கப்பலுக்குத் தீ பரவியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும், ஒரு கப்பலிலிருந்து மற்றைய கப்பலுக்கு எரிபொருளை மாற்றும்போதே தீ பற்றிக் கொண்டதாக ரஷ்ய கடற்றுறை அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதேவேளை, இரு கப்பல்களின் கெப்டன்களிடம் இருந்தும் சமிக்ஞை எதுவும் கிடைக்கவில்லை என ஏ.எவ்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. வெனிஸ் (Venice) மற்றும் மயெஸ்ட்ரோ (Maestro) ஆகிய இரண்டு கப்பல்களிலேயே இவ்வாறு தீ பரவியுள்ளது.