அரசியலில் எந்த ஆர்வமும்‌ இல்லை: அஜித்

அரசியலில் எந்த ஆர்வமும்‌ இல்லை: நடிகர் அஜித்

by Chandrasekaram Chandravadani 22-01-2019 | 6:23 AM
அரசியலில் தனக்கு எந்தவித ஆர்வமும் இல்லை என, நடிகர் அஜித் குமார் தெரிவித்துள்ளார். அஜித் ரசிகர்கள் சிலர் பாரதிய ஜனதாக் கட்சியில் இணைந்தார்கள் என செய்தி ஒன்று வௌியாகியிருந்ததைத் தொடர்ந்து, தமிழிசை சௌவுந்தர்ராஜன், அஜித் மற்றும் அஜித் ரசிகர்களை நேர்மையானவர்கள் என பாராட்டிப் பேசியிருந்தார். இந்தநிலையில், நான்‌ தனிப்பட்ட முறையிலோ அல்லது நான்‌ சார்ந்த திரைப்படங்களில்‌ கூட அரசியல்‌ சாயம்‌ வந்து விடக்‌கூடாது என்பதில்‌ மிகவும்‌ தீர்மானமாக உள்ளவன்‌ என்பது அனைவரும்‌ அறித்ததே. என்னுடைய தொழில்‌ சினிமாவில்‌ நடிப்பது மட்டுமே என்பதை நான்‌ தெளிவாக புரிந்துவைத்திருப்பதே இதற்குக் காரணம்‌. எனக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ அரசியல்‌ ஈடுபாட்டில்‌ எந்த ஆர்வமும்‌ இல்லை. ஒரு சராசரி பொதுமகனான வரிசையில்‌ நின்று வாக்களிப்பது மட்டுமே எனது அதிகபட்ச அரசியல்‌ தொடர்பாகும். நான்‌ என்‌ ரசிகர்களை குறிப்பிட்ட ஒரு கட்சிக்கு ஆதரவு அளியுங்கள் அல்லது வாக்களியுங்கள்‌ என்றோ எப்பொழுதும்‌ நிர்பந்தித்தது இல்லை, நிர்பந்திக்கவும்‌ மாட்டேன்‌. அரசியலில்‌ எனக்கும்‌ தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. அதை தான்‌ யார்‌ மீதும்‌ திணிப்பதில்லை. மற்றவர்கள்‌ கருத்தை என்‌ மேல்‌ திணிக்கவிட்டதும்‌ இல்லை. என்‌ ரசிகர்களிடம்‌ இதையேதான்‌ நான்‌ எதிர்பார்க்கிறேன்‌. உங்கள்‌ அரசியல்‌ கருத்து உங்களுடையதாகவே இருக்கட்டும்‌. என்‌ பெயரோ, என்‌ புகைப்படமோ எத்த ஒரு அரசியல்‌ திகழ்விலும்‌ இடம்‌பெறுவதை நான்‌ சற்றும்‌ விரும்புவதில்லை. எனது ரசிகர்களிடம்‌ எனது வேண்டுகோள்‌ என்னவென்றால்‌ நான்‌ உங்களிடம்‌ எதிர்பார்ப்பது எல்லாம்‌, மாணவர்கள்‌ தங்களது கல்வியில்‌ கவனம்‌ செலுத்துவதும், தொழில்‌ மற்றும்‌ பணியில்‌ உள்ளோர்‌ தங்களது கடமையைச் செவ்வனே செய்வதும் சட்டம்‌ ஒழுங்கை மதித்து நடந்து‌ கொள்வதும்‌ ஆரோக்கியத்தின்‌ மீது கவனம்‌ வைப்பதும்‌ வேற்றுமை கலைந்து ஒற்றுமையுடன்‌ இருப்பதும் மற்றவர்களுக்கு பரஸ்பர மரியாதை செலுத்துவதும் தான்‌. அதுவே நீங்கள்‌ எனக்கு செய்யும்‌ அன்பு. வாழு வாழ விடு என நடிகர் அஜித் குமார் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.