வடக்கில் படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு

வடக்கில் பாதுகாப்புப் படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு

by Staff Writer 21-01-2019 | 3:43 PM
Colombo (News 1st) வடக்கில் பாதுகாப்புப் படையினர் நிலைகொண்டிருந்த 1,363 ஏக்கர் காணி , ஜனாதிபதியால் விடுவிக்கப்பட்டுள்ளது. காணிகளை விடுவிப்பதற்கான ஆவணம் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதியால் ஜனாதியிடம் கையளிக்கப்பட்டதாக, நியூஸ்பெஸ்ட்டின் செய்தியாளர் கூறியுள்ளார். இந்த ஆவணத்தை காணி உரிமையாளர்களிடம் கையளிப்பதற்காக மாவட்ட அரசாங்க அதிபர்களிடம் ஜனாதிபதி இன்று வழங்கியுள்ளார். இதற்கான நிகழ்வு முல்லைத்தீவில் இன்று நடைபெற்றது. அதற்கமைய, 972 ஏக்கர் காணி கிளிநொச்சி மாவட்டத்திலும் 120 ஏக்கர் காணி முல்லைத்தீவு மாவட்டத்திலும் யாழ்ப்பாணத்தில் 46 ஏக்கர் காணியும் வன்னியில் 63 ஏக்கர் காணியும் விடுவிக்கப்பட்டுள்ளது. இதுவரைகாலம் இந்தக் காணிகளில் இலங்கை இராணுவத்தினர் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்தோடு, இராணுவ பண்ணைகள் காணப்பட்ட நாச்சிக்குடா, வெல்லன்குளம், உடையார்கட்டுகுளம் ஆகிய இடங்களும் விடுவிக்கப்படவுள்ளதாக இலங்கை இராணுவம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.