ராமர் கோயிலை வைத்து காங்கிரஸிடம் பேரம்

ராமர் கோயிலை வைத்து காங்கிரஸிடம் பேரம்

by Fazlullah Mubarak 21-01-2019 | 8:54 AM

ராமர் கோயில் விவகாரத்தில் காங்கிரஸின் நிலைப்பாட்டை பொறுத்து தமது ஆதரவு குறித்தான தீர்மான அமையும் என விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது.

ராமர் கோயில் பிரச்சனை தொடர்பாக தேர்தல் அறிக்கையில் காங்கிரஸ் அறிவித்தால் அக்கட்சக்கு எதிர்வரும் மக்களவை தேர்தலில் ஆதரவளிப்பது தொடர்பாக பரிசீலக்கப்படும் என விஷ்வ ஹிந்து பரிஷத் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் மக்களவைத் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் , பிரதமர் நரேந்திர மோடியின் மத்திய அரசுக்கு முன்னெச்சரிக்கை அளிக்கும் வகையில் விஷ்வ ஹிந்து பரிஷத் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் ராமர் கோயில் பிரச்னை தொடர்பில் மோடி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளதுடன், இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் செயல் தலைவர் அலோக் குமார் “ஒருவேளை காங்கிரஸ் ராமர் கோயில் பிரச்னையை தங்கள் தேர்தல் அறிக்கையில் வெளியிட்டால், மக்களவை தேர்தலில் அந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது தொடர்பாக பரிசீலனை செய்வோம்” என தெரிவித்துள்ளார். ஆயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதில் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ள நிலையில் விஷ்வ ஹிந்து பரிஷத் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு கொடுக்கப்படும் நெருக்கடியாக கருதப்படுகிறது. 1964ஆம் ஆண்டு அப்போதைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் கோல்வால்கரால் நிறுவப்பட்ட விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு, தொடர்ந்து ராமர் கோயில் கோரிக்கை எழுப்பி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.