யாழ்.மாநகர ஆணையாளர், மேயர் மீதான வழக்கு தள்ளுபடி

யாழ். மாநகர ஆணையாளர், மேயருக்கு எதிரான வழக்கு தள்ளுபடி

by Staff Writer 21-01-2019 | 7:09 PM
Colombo (News 1st) யாழ்ப்பாண மாநகரசபை எல்லைக்குள் நாட்டப்பட்ட கேபிள் ரிவி இணைப்புக்களுக்கான கம்பங்களை அகற்றியமைக்கு எதிரான வழக்கை யாழ். நீதவான் நீதிமன்றம் இன்று (21) தள்ளுபடி செய்துள்ளது. யாழ். மாநகர எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக நாட்டப்பட்டிருந்த கேபிள் ரிவி இணைப்புக்களுக்கான கம்பங்களை அகற்றுவதற்கு மாநகர மேயர் கடந்த திங்கட்கிழமை நடவடிக்கை எடுத்திருந்தார். இந்த நடவடிக்கையை ஆட்சேபித்து எதிராக யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் மற்றும் மாநகர ஆணையாளர் இ. ஜெயசீலன் ஆகியோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. யாழ்ப்பாணம் நீதவான் அந்தோனிசாமி பீட்டர் பால் முன்னிலையில் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது வழக்கைத் தள்ளுபடிசெய்து நீதவான் உத்தரவிட்டுள்ளார். வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் முறையாக பணம் செலுத்தி அனுமதி பெற்றதன் பின்னரே கம்பங்கள் நாட்டப்பட்டதாக மனுதாரர் தரப்பு சட்டத்தரணி மன்றில் தெரிவித்துள்ளார். எனினும், மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் முன்னெடுக்கப்படும் நிர்மாண நடவடிக்ககைகளுக்கு மாநகரசபையின் அனுமதி பெறப்பட்டிருக்க வேண்டும் என பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி மன்றில் சுட்டிக்காட்டியிருந்தார். மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகள் மாநகரசபைக்கே உரித்தானது என்பதால் மாநகரசபையின் அனுமதியைப் பெற்றே நிர்மாண நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் எனத் தெரிவித்த நீதவான், பிரதிவாதிகளை வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்வதாக அறிவித்துள்ளார்.  

ஏனைய செய்திகள்