மான்ஜிப் நகர பாதுகாப்பை பொறுப்பேற்கும் துருக்கி

மான்ஜிப் நகரின் பாதுகாப்பைப் பொறுப்பேற்பதாக துருக்கிய ஜனாதிபதி தெரிவிப்பு

by Staff Writer 21-01-2019 | 6:37 PM
சிரியாவின் மான்பிஜ் (Manbij) நகரின் பாதுகாப்பினை தாம் பொறுப்பேற்றுக் கொள்வதாக, துருக்கிய ஜனாதிபதி ரிசெப் தயிப் எர்டோகன் தெரிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் இடம்பெற்ற தொலைபேசி உரையாடலின்போதே தயிப் எர்டோகன் இதனைக் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் 4 அமெரிக்கர்கள் கொல்லப்பட்ட குண்டுத்தாக்குதல் சம்பவத்திற்கு ஐ.எஸ். அமைப்பினர் உரிமை கோரியிருந்த நிலையிலேயே, குறித்த அறிவிப்பு வௌியிடப்பட்டுள்ளது. சிரியாவின் வட கிழக்கு பிராந்தியத்திலுள்ள மான்பிஜ் நகரில் நடாத்தப்பட்ட தற்கொலைக்குண்டுத் தாக்குதல், அமெரிக்க ஆதரவுடனான குர்திஷ் படைகளுடன் இணைந்த ஒரு ஆயுதக்குழுவால் கட்டுப்படுத்தப்பட்டதாக தயிப் எர்டோகன் கூறியுள்ளார். இது கோபமூட்டும் நடவடிக்கையாக அமைந்ததாகக் குறிப்பிட்டுள்ள துருக்கிய ஜனாதிபதி, கடந்த மாதம் அமெரிக்க ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்பட்ட அமெரிக்கப் படை வௌியேற்றத்தை இது பாதிப்பதாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே, சிரியாவில் உள்ள ஈரானின் இலக்குகள் மீது இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது. ஈரானிய சிறப்புப் புரட்சிப்படைக்கு எதிராக தங்களின் தாக்குதல் நடவடிக்கை அமைந்துள்ளதாக இஸ்ரேலிய பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. இதனிடையே, நேற்றையதினம் சிரியாவில் உள்ள கோலான் மலைப்பகுதியிலிருந்து ஏவப்பட்ட ரொக்கெட்டை தாம் இடைமறித்ததாக இஸ்ரேலிய பாதுகாப்புப் படை தெரிவித்தது. அத்துடன், இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல்களைத் தாம் முறியடித்துள்ளதாக சிரிய அரச ஊடகம் குறிப்பிட்டுள்ளது.