சமஷ்டிமுறை தொடர்பிலான சி.வி.விக்னேஸ்வரனின் கருத்து

சமஷ்டி முறை தான் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் - முன்னாள் முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன்

by Staff Writer 21-01-2019 | 8:59 PM
Colombo (News 1st) பிறரின் அதிகாரத்திற்குக் கீழ்படியாமல் எம்மை நாமே ஆள்வதற்கு சமஷ்டி முறை தான் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என, வட மாகாணத்தின் முன்னாள் முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களின் வாராந்த கேள்விகளுக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். புதிய அரசியலமைப்பு வரைவில் தடுமாற்றம்தரும் சொற்பிரயோகங்கள் பெரும்பான்மை மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்டிருக்கும் நீதித்துறையினருக்கு பக்கச்சார்பான தீர்மானங்களை வழங்க இடமளிக்கும் என அவர் தெரிவித்துள்ளார். சிங்களவருக்கு ஒரு முகம், தமிழர்களுக்கு இன்னொரு முகம் காட்ட முற்பட்டாலும் இந்த வரைவினால் வரும் பிரச்சினைகளை பெரும்பான்மையின நீதியரசர்களே தீர்க்கப் போவதாகவும் சி.வி. விக்னேஸ்வரன் கூறியுள்ளார். “ஏகிய இராஜ்ய” என்பதை ஒற்றையாட்சி எனவே பெரும்பான்மையினர் கருதுவர் எனவும் தமிழ் அரசியல்வாதிகளின் “ஒருமித்த நாடு” என்ற கருத்தை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். எனவே, பிறரின் அதிகாரத்திற்குக் கீழ்படியாமல் எம்மை நாமே ஆள்வதற்கு சமஷ்டி முறை தான் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் தந்தை செல்வாவின் விருப்பமும் இதுவே எனவும் சி.வி. விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். சமஷ்டி எவ்வாறு சிங்கள மக்களுக்குப் பாதகம் விளைவிக்கும் என்பதைச் சிங்கள அறிவியலாளர்கள் எமக்குக் கூற வேண்டும் எனவும் அதற்கான தக்க பதிலை வழங்க தாம் தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உண்மையில் சமஷ்டியானது வெவ்வேறு மாகாணங்களில் வாழும் சிங்கள மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எது எவ்வாறாயினும் குறித்த வரைவு தற்போது அலுமாரியில் வைத்துப் பூட்டியாகிவிட்டது என்றே கொள்ளவேண்டியுள்ளது எனவும் வட மாகாண முன்னாள் முதல்வர் கூறியுள்ளார். அத்துடன், அழுத்தம் இல்லாமல் பெரும்பான்மை சிங்கள அரசாங்கங்கள் தமிழ் மக்களுக்கு எதுவுமே தரமாட்டார்கள் என்பது கண்கூடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பயங்கரவாதத் தடைச்சட்ட நீக்கம், அரசியல் கைதிகள் விடுதலை, பொது மக்களின் காணிகள் விடுவிப்பு, வடக்கிலிருந்து படையினரை நீக்குதல் என பல விடயங்களை ரணிலுக்கு உதவ முன்னர் நிபந்தனையாக இட்டு சாதித்திருக்கலாம் எனவும் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இப்பொழுது யானைக்கு அடிசறுக்கியுள்ளது எனவும் அகங்காரத்திற்கு அடி கொடுக்கப்பட்டுள்ளது எனவும் சாணக்கியம் சறுக்கிப் போயுள்ளது எனவும் முன்னாள் வட மாகாண முதல்வரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான சி.வி. விக்னேஸ்வரன், வாராந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது குறிப்பிட்டுள்ளார்.