by Staff Writer 21-01-2019 | 8:50 PM
Colombo (News 1st) அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பிலான நிபுணர் குழுவின் அறிக்கையை நிராகரிப்பதாக, ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம் தெரிவித்துள்ளது.
தற்போதைய அரசியல் பின்னணியில் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பிலான நிபுணர் குழுவின் அறிக்கையைக் கவனமாகவும் நிதானமாகவும் ஆராய்ந்து பார்க்கையில், அதனை நிராகரிப்பதனைத் தவிர வேறு தெரிவு எதுவும் தமக்கு இல்லை என ரெலோ வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிபுணர் குழுவின் அறிக்கையின்படி, ஒற்றையாட்சி முறை தொடர்ந்து நீடிப்பதற்கு மிகவும் சாதூர்யமாக பிரேரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகாரப் பங்கீட்டு விடயத்தில் அதனை விஸ்தரித்து வலுப்படுத்தி முழுமைப்படுத்துவதற்குப் பதிலாக அரைகுறையான அதிகாரங்களை மாத்திரமே மாகாணசபைகளுக்கு வழங்கியிருக்கும் 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் ஆக்கபூர்வமான எந்தவொரு முன்னேற்றகரமான யோசனையும் இதில் காணப்படவில்லை எனவும் ரெலோ வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்த்தேசிய இனத்தின் அரசியல் அபிலாஷைகளைத் தொடர்ந்து நிராகரித்து, பௌத்த பெரும்பான்மையினரில் அரசியல் மேலாதிக்கத்தை வலுப்படுத்தும் வகையில் இந்தத் தீர்வுத்திட்ட அறிக்கை அமைந்துள்ளது என்பதை திட்டவட்டமாக தெரிவிக்கத் தவறினால் அது தமிழ் மக்களுக்கு தாம் இழைக்கும் துரோகமாக அமையும் எனவும் ரெலோ அமைப்பின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் செயலாளர் நாயகம் நா. ஶ்ரீகாந்தா ஆகியோர் கையொப்பமிட்டு வௌிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.