அமெரிக்க அரசபணி முடக்கம் தொடர்பில் ட்ரம்ப் ஆலோசனை

அமெரிக்க அரசபணி முடக்கம் தொடர்பில் ட்ரம்ப் ஆலோசனை

by Staff Writer 20-01-2019 | 8:01 AM
அமெரிக்காவில் அரச பணி முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சில யோசனைகளை முன்வைத்துள்ளார். கடந்த 29 நாட்களாக அமெரிக்காவில் நிர்வாக முடக்கம் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. இதனால், சுமார் 8 இலட்சம் மக்கள் ஊதியமின்றி தொழில்புரிவதுடன், நிர்வாக முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில் நேற்று அந்நாட்டு ஜனாதிபதி நேற்று விசேட உரை நிகழ்த்தியிருந்தார். இதன்போது, அமெரிக்காவில் தஞ்சம் கோரியுள்ள சுமார் 7 இலட்சம் புகலிடக் கோரிக்கையாளர்களின் பாதுகாப்பை மேலும் 3 வருடங்களுக்கு நீடிக்கவுள்ளதாக டொனால்ட் ட்ரம்ப் இதன்போது கூறியுள்ளார், அத்துடன் அவர்களுக்கான, தொழில் அனுமதியையும் மேலும் நீடிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி யோசனை முன்வைத்துள்ளார். புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த இந்த யோசனைகளை முன்வைத்து எல்லைச்சுவரை நிர்மாணிப்பதற்கான நிதியை அமெரிக்க ஜனாதிபதி கோரியுள்ளார். எல்லைச் சுவரை அமைப்பதற்கு 5.7 பில்லியன் அமெரிக்க டொலர் நிதி தேவைப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. நிதியை வழங்கும் பிரேரணைக்கு காங்கிரஸ் அனுமதி வழங்காததால் அமெரிக்காவில் அரச துறைகளுக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யும் பிரேரணைகளில் கைச்சாத்திடுவதை அமெரிக்க ஜனாதிபதி மறுத்திருந்தார். அரச பணி முடக்கத்தை சீர்செய்ய ட்ரம்புக்கும் குடியரசுக் கட்சி தலைவர்களுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்தைகள் இடம்பெற்றதுடன், அவை இணக்கப்பாடின்றி முடிவடைந்தது. இதன் காரணமாக அமெரிக்காவில் அரச பணி முடக்கம் தொடர்வதுடன், இதுவே அமெரிக்க வரலாற்றில் அரச பணிகள் முடங்கிய அதிகூடிய நாட்களாகக் கருதப்படுகின்றது. இதற்கு முன்னர் 1995 ஆம் ஆண்டு ஜனாதிபதி பில் கிளிண்டனின் ஆட்சிக் காலத்தில் 22 நாட்களுக்கு அரச பணிகள் முடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.