மனிதப் புதைகுழி அகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தம்

மன்னார் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

by Staff Writer 19-01-2019 | 3:51 PM
Colombo (News 1st) மன்னார் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளன. எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை அகழ்வுப் பணிகளை இடைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக அகழ்வுப் பணிக்கு பொறுப்பான மன்னார் சட்ட வைத்திய நிபுணர் சமிந்த ராஜபக்ஸ தெரிவித்தார். தாம் உள்ளிட்ட குழுவினர் மனித எச்சங்களின் மாதிரிகளை ஆய்விற்காக அமெரிக்காவின் புளோரிடாவிற்கு எடுத்துச் செல்லவுள்ளதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். நீதிமன்றத்தின் அனுமதியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் சட்ட வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார். மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்கள் எந்த காலப்பகுதிக்குரியவை என்பதை கண்டறியும் கார்பன் பரிசோதனைக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி இந்த குழுவினர் அமெரிக்காவிற்கு செல்லவுள்ளனர். இந்த குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் பிரதிநிதி ஒருவரும் செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மன்னார் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் நேற்று வரை 132 நாட்களாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படடன. இந்த காலப்பகுதியில் சுமார் 300 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் 23 சிறார்களின் எச்சங்களும் அடங்குகின்றன.

ஏனைய செய்திகள்