நுவரெலியாவிலும் படைப்புழு தாக்கம்

by Staff Writer 19-01-2019 | 4:08 PM
Colombo (News 1st) நுவரெலியா மாவட்டத்தில் முதற்தடவையாக படைப்புழு அடையாளங்காணப்பட்டுள்ளது. ஹட்டன் - ருவன்புர பகுதியிலுள்ள விவசாயக் காணியில் படைப்புழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார். ருவன்புர பகுதியிலுள்ள மக்கள் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதுடன், மரக்கறி வகைகளுடன் சோளம் உள்ளிட்ட இடைநிலைப் பயிர்செய்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். சோளச் செடிகள் அண்மைக்காலமாக அழிவடைந்து வந்த நிலையில், அதுகுறித்து ஆராய்ந்த போது சோளத்தில் படைப்புழுக்கள் மற்றும் அவற்றின் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சோள செய்கையைத் தாக்கியுள்ள இந்த படைப்புழுக்களால் தமது மரக்கறி மற்றும் சிறு தேயிலை செய்கைக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டனர். சோள செய்கை பாதிக்கப்பட்ட உடனேயே அவற்றை தீயிட்டு அழிக்குமாறு விவசாயத் திணைக்களம் விவசாயிகளை அறிவுறுத்தியுள்ளது. அவற்றை அழிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி W.M.W.வீரகோன் குறிப்பிட்டார்.