சட்டவிரோத கேபிள்கள் அகற்றப்படும்:  யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் 

by Staff Writer 19-01-2019 | 7:36 PM
Colombo (News 1st) யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக பொருத்தப்பட்டுள்ள கேபிள்களை நீதிமன்ற நடவடிக்கையூடாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். பாதுகாப்பற்ற முறையில் மின்சாரக் கம்பங்களூடாக தொலைக்காட்சி கேபிள் இணைப்பு வழங்கப்படுவது தற்போதும் அச்சுறுத்தலாகவே அமைந்துள்ளது. பாதுகாப்பற்ற வகையில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் இணைப்புகளால் சில உயிரிழப்புகள் பதிவாகியுள்ள போதிலும், அவற்றை முழுமையாக அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல பகுதிகளில் மின் கம்பங்களூடாக தொடர்ந்தும் தொலைக்காட்சி கேபிள் இணைப்புகள் பொருத்தப்பட்டுள்ளமையை காண முடிகிறது. மின்சார கம்பங்களில் பொருத்தப்பட்ட கேபிள் இணைப்புகள் காரணமாக கடந்த வருடம் மே மாதம் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இருவர் பரிதாபகரமாக உயிரிழந்தனர். இதனையடுத்து, இந்த விடயம் பூதாகரமானதுடன், மின்சாரக் கம்பங்களில் பொருத்தப்பட்டுள்ள கேபிள் வயர்களை அகற்றுமாறு மக்கள் கோரிக்கை விடுத்தனர். இவ்வாறான அபாயகர கேபிள் இணைப்புகள் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் தொடர்ந்தும் சுட்டிக்காட்டி வந்தது. மின் கம்பங்களில் அபாயகரமான முறையில் பொருத்தப்பட்டுள்ள இந்த கேபிள் இணைப்புகள் தொடர்பில் மின்சக்தி அமைச்சராகவிருந்த ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் கவனத்திற்கு நாம் பல முறை கொண்டு வந்தோம். முன்னாள் மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய பல விடயங்களைக் கூறினாலும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதனையும் முன்னெடுக்கவில்லை. இது தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்ட குழுக்களூடாக எவ்வாறான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன? சட்டவிரோத தொலைக்காட்சி கேபிள் இணைப்பு காரணமாக கடந்த வருடம் ஒக்டோபர் மாதத்தில் மற்றுமொருவரின் உயிர் யாழ்ப்பாணத்தில் காவு கொள்ளப்பட்டது. கேபிள் இணைப்பினூடாக மின்சாரம் தாக்கியதில் யாழ்பாணம் - ஆஸ்பத்திரி வீதியைச் சேர்ந்த 55 வயதான இராசநாயகம் லீலாவதி என்ற வயோதிபப் பெண் உயிரிழந்தார். கேபிள் இணைப்பினை பிடித்தவாறு குறித்த வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளமையையும் நியூஸ்ஃபெஸ்ட் சுட்டிக்காட்டியிருந்தது. இவ்வாறு மக்களின் உயிர்கள் காவு கொள்ளப்படும் நிலை தொடர்ந்தாலும், பாதுகாப்பற்ற கேபிள்கள் இதுவரை அகற்றப்படவில்லை. இந்த நிலையில், உயிர் ஆபத்து விளைவிக்கும் எந்தவொரு விடயத்தையும் அனுமதிக்க முடியாது என யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவித்தார். யாழ். மாநகர சபையின் தீர்மானமாகவும் அது காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். யாழ். மாநகர சபையால் கேபிள்களை பொருத்துவது தொடர்பான நிபந்தனைகளை தயாரித்து நிறைவேற்றுவதற்கு முன்னர், திடீரென புதிதாக ஒரு நிறுவனத்தினால் கேபிள்கள் பொருத்தப்பட்டதாக மேயர் குறிப்பிட்டார். எனினும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே அதற்கான அனுமதியை வழங்க முடியும் எனவும் இமானுவேல் ஆர்னோல்ட் சுட்டிக்காட்டினார். அத்துடன், இது உடனடியாக நிறுத்தப்பட வேண்டிய விடயம் எனவும் யாழ். மாநகர மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் வலியுறுத்தினார்.