கேகாலை கினிவிட்ட கனிஷ்ட வித்தியாலயத்தை சுத்தம் செய்த V-Force குழுவினர்

by Staff Writer 19-01-2019 | 7:17 PM
Colombo (News 1st) மக்கள் சக்தி V-Force திட்டத்தின் நான்காம் கட்டம் கேகாலையில் இன்று முன்னெடுக்கப்பட்டது. கேகாலை மாவட்டத்தின் பின்தங்கிய பகுதியொன்றிலுள்ள பாடசாலைக்கு V-Force குழுவினர் இன்று சென்றிருந்தனர். வரக்காபொல நகரிலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலுள்ள தெதிகம - மஹபல்லேகம கினிவிட்ட கனிஷ்ட வித்தியாலயம் அமைந்துள்ளது. இந்தப் பாடசாலை மாணவர்கள் மிகுந்த சிரமத்தின் மத்தியின் பாழடைந்த கட்டடத்திலேயே கல்வியைத் தொடர வேண்டிய நிலை காணப்பட்டது. இந்த கட்டடத்தை சீரமைத்து வர்ணம் பூசும் நடவடிக்கையில் V-Force குழுவினர் இன்று ஈடுபட்டனர். வரையறுக்கப்பட்ட கெப்பிட்டல் மகாராஜா நிறுவனத்தின் பிரதான நிறைவேற்றதிகாரி மொஹான் பராரா, குழுமப் பணிப்பாளர் ஷெவான் டேனியல், நியூஸ்ஃபெஸ்ட்டின் பொது முகாமையாளர் யசரத் கமல்சிறி உள்ளிட்ட அதிகாரிகளும் இந்த நடவடிக்கையில் இணைந்து கொண்டிருந்தனர். கன்சாய் பெயின்ட் லங்கா தனியார் நிறுவனமும் ஏ-பேட் எனப்படும் இடர் முகாமைத்துவம் தொடர்பான ஆசிய பசுபிக் ஒத்துழைப்பு அமைப்பும் இதற்கு பங்களிப்புச் செய்தன. தொழில்சார் பிரதிநிதிகள், மக்கள் சக்தி மற்றும் நியூஸ்ஃபெஸ்ட் பிரதிநிதிகள், மொரட்டுவை - பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களின் மாணவர்கள், MIM எனப்படும் Maharaja Institute of Management நிறுவனத்தின் டிப்ளொமா பாடநெறி மாணவர்கள் ஆகியோரும் இதில் கலந்துகொண்டிருந்தனர். கினிவிட்ட கனிஷ்ட வித்தியாலயத்தின் வரலாற்றை புதுப்பித்த மக்கள் சக்தி V-Force குழுவினர், இவ்வாறான மற்றுமொரு தேசிய வேலைத்திட்டத்தை முன்னெடுக்கும் எதிர்பார்ப்புடன் இந்த பாடசாலையிலிருந்து விடைபெற்றனர்.