ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திடமுள்ள A330 ரக விமானங்களுக்காக மாதந்தோறும் 3 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளது

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திடமுள்ள A330 ரக விமானங்களுக்காக மாதந்தோறும் 3 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளது

ஶ்ரீலங்கன் விமான நிறுவனத்திடமுள்ள A330 ரக விமானங்களுக்காக மாதந்தோறும் 3 மில்லியன் அமெரிக்க டொலர் மேலதிகமாக செலுத்த வேண்டியுள்ளது

எழுத்தாளர் Staff Writer

19 Jan, 2019 | 9:11 pm

Colombo (News 1st) ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திடமுள்ள A330 ரக நான்கு விமானங்களுக்காக மாதந்தோறும் 3 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகத் தொகையை மேலதிமாக செலுத்த வேண்டியேற்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு வழங்கப்பட்ட அறிக்கையூடாக இந்த விடயம் வெளியானது.

எவ்விதப் பயனுமற்ற நிலையில் இந்த நான்கு விமானங்களும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளமையை நியூஸ்ஃபெஸ்ட் அண்மையில் சுட்டிக்காட்டியிருந்தது.

இதற்காக மாதந்தோறும் 585,000 அமெரிக்க டொலர்கள் செலுத்தப்படுகிறது.

எனினும், இவ்வாறான விமானமொன்றின் தற்போதைய குத்தகைப் பெறுமதி 350,000 தொடக்கம் 450,000 அமெரிக்க டொலருக்கும் இடைப்பட்ட தொகையாகும்.

A 330 – 300 ரக விமானத்தை 660,000 தொடக்கம் 700,000 அமெரிக்க டொலருக்கு இடைப்பட்ட தொகைக்கு தற்போது பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறான பின்னணியில், நீண்டகால குத்தகை அடிப்படையில் 10 இலட்சம் அமெரிக்க டொலருக்கும் அதிகப் பெறுமதிக்கு, ஸ்ரீலங்கன் விமான நிறுவனம் இந்த விமானங்களை கொள்வனவு செய்துள்ளது.

கடந்த ஆட்சிக்காலப் பகுதியிலே இந்த விமானங்கள் நீண்ட கால குத்தகை அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டன.

இந்த நான்கு விமானங்களும் விமான நிறுவனத்தின் அடிப்படைத் தேவைகளுக்கு அனுகூலமற்றவை என்பதுடன், இதற்காக மாதந்தோறும் 3 மில்லியன் அமெரிக்க டொலருக்கும் அதிகத் தொகையை செலவிட நேரிட்டுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் பிரதான நிறைவேற்று அதிகாரி சுரேன் ரத்வத்தவும் கையொப்பமிட்டுள்ளார்.

இந்த மூன்று விமானங்களும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தில் தற்போது மேலதிகமாக காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்திற்கு A350-900 ரக நான்கு விமானங்களை கொள்வனவு செய்வதற்கு மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் எடுத்த தீர்மானம் இரத்து செய்யப்பட்டமையால், எயார் கெப் நிறுவனத்திற்கு 98 மில்லியன் அமெரிக்க டொலர் நட்ட ஈடு செலுத்த வேண்டிய நிலை உருவானது.

அத்துடன், சில நிபந்தனைகளுக்கு அடிபணிய வேண்டிய நிலையும் இதனால் ஏற்பட்டது.

பிரதமரால் வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைய சரித ரத்வத்தவினால் அனுப்பப்பட்ட மின்னஞ்சல் ஊடாகவே, இதனை இரத்து செய்யும் தீர்மானம் எடுக்கப்பட்டது என்பதை நியூஸ்ஃபெஸ்ட் அண்மையில் வெளிப்படுத்தியது.

சரித ரத்வத்த என்பவர் சுரேன் ரத்வத்தவின் சகோதரராவார்.

பயன்பாடற்றுக் காணப்படும் இந்த விமானம், மாதந்தோறும் 10 கோடி ரூபாவுக்கும் அதிக நீண்டகால குத்தகைத் தொகை செலுத்தப்பட்டு, இந்த உடன்படிக்கையிலுள்ள நிபந்தனைகளுக்கு அமையவே கொள்வனவு செய்யப்பட்டது.

இவ்வாறு மேலதிகமாக செலுத்தப்பட்ட பணம் யாருக்கு சென்றது?

மேலதிகமாக செலுத்தப்படுகின்றமையை அறிந்துள்ள நிலையில், அதனை தற்போதேனும் நிவர்த்தி செய்யாமைக்கான காரணம் என்ன?

இவ்வாறு வீண் விரயமாக்கப்படுவது மக்களின் பணமல்லவா?


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்