சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்கும் இடையில் உடன்படிக்கை கைச்சாத்து

by Staff Writer 18-01-2019 | 8:09 PM
Colombo (News 1st) சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கும் இலங்கைக்கும் இடையில் ஐந்து வருட செயற்பாட்டுத் திட்டத்திற்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸூக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளது. சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்ற ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை, அங்கு கல்வி கற்கும் இலங்கை மாணவர்கள் வரவேற்றனர். சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனத்தின் பிரதி பணிப்பாளர் நாயகம் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர். இலங்கையை அரிசியில் தன்னிறைவடையச் செய்வதற்கான தேசிய திட்டத்தை நடைமுறைப்படுத்தல் மற்றும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கங்களைக் குறைத்தல் ஆகியன இதன் நோக்கமாகும். நிறுவன வளாகத்தை ஜனாதிபதி கண்காணித்ததுடன், விதை நெல் முகாமைத்துவம் தொடர்பான அறிமுகமும் ஜனாதிபதிக்குக் காண்பிக்கப்பட்டது. விவசாயத்துறைக்காக ஜனாதிபதி ஆற்றிய அர்ப்பணிப்பைப் பாராட்டும் வகையில், சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவனம் ஒன்றுக்கு ஜனாதிபதியின் பெயரை சூட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.