காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினருக்கு குழுவில் அனுமதி

எச்சங்களை ஆய்விற்காக எடுத்துச்செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவருக்கு அனுமதி

by Staff Writer 18-01-2019 | 4:00 PM
Colombo (News 1st) மன்னார் சதொச வளாகத்திலுள்ள மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட எச்சங்களை அமெரிக்காவிற்கு ஆய்விற்காக எடுத்துச்செல்லும் குழுவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் பிரதிநிதி ஒருவரை இணைத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மன்னார் நீதவான் நீதிமன்றத்தினூடாக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்தை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம் இந்த அனுமதியை வழங்கியுள்ளது. மன்னார் நகர் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்களின் மாதிரிகளை அமெரிக்காவிலுள்ள புளோரிடாவிற்கு கார்பன் பரிசோதனைக்காக எடுத்துச்செல்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எதிர்வரும் 24 ஆம் திகதி அதிகாலை குறித்த குழு அமெரிக்கா நோக்கி பயணிக்கவுள்ளது. இந்த நிலையில், இன்றும் மனிதப் புதைகுழியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுவதாக நியூஸ்ஃபெஸ்ட்டின் பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார்.