பொய்யுரைப்பது யார்?

by Staff Writer 17-01-2019 | 9:16 PM
Colombo (News 1st) யாழ். பருத்தித்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டார். இந்நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்ததாவது,
தெற்கிலேயும் கூட மிக மோசமான பரப்புரையை செய்துகொண்டிருக்கிறார்கள். அதில் சிரச, சக்தி, எம்.ரீ.வி ஊடகம் பிரதானமானது. பொய் பரப்புரை செய்பவர்கள். நான் தெட்டத்தெளிவாக எதைச் சொன்னேனோ அதற்கு நேர் எதிரான ஒரு கருத்தை அந்த ஊடகம் பரப்பிக்கொண்டு இருக்கிறது
என எம்.ஏ. சுமந்திரன் குறிப்பிட்டார். பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை நேற்றைய தினம் சுமத்தியிருந்தார். கடந்த 12 ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் தெரிவித்த விடயம் தொடர்பாகவே அவர் இந்தக் கருத்தை குறிப்பிட்டிருந்தார். கடந்த 12 ஆம் திகதி அவர் தெரிவித்ததாவது,
சிங்கள மக்களுடைய மனதை வெல்ல வேண்டும்.... நாடு பிரிந்து விடும் என்பது அவர்களுக்கு இருக்கின்ற பயங்கரமான பயம். ஏன் அந்த பயம் இருக்க வேண்டும் என்பது எனக்குத் தெரியாது. பிரிந்தாலும் பிரியலாம்.
இந்த நிலையில், நேற்றைய தினம் (16) அவர் பின்வருமாறு கருத்தொன்றை முன்வைத்தார்.
அன்றைக்கு சிங்கள செய்தியிலே தலையங்கமாக அவர்கள் படித்த செய்தி "தனிநாடு உருவாகக் கூடிய சாத்தியக்கூறு உண்டு, என்று சுமந்திரன் சொன்னார். அது தான் அவர்கள் சிரச செய்தியிலே சொன்ன செய்தி.
தென்னிலங்கையில் அவர் மீதான எதிர்ப்பு வலுப்பெறுவதாலும் , அவர் ஆதரவு வழங்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரை பாதுகாப்பதற்காகவும் முன்னர் கூறிய கருத்தை தான் தெரிவிக்கவில்லை என ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தற்போது வாதாடுகிறார். தெரிவித்த கருத்தை அழுத்தங்களின் காரணமாக மீளப்பெறுவதற்கு நாங்கள் அரசியல்வாதிகள் அல்ல. நடுநிலையின் பால் நிற்கும் ஊடகம் என்பதை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அவர்களுக்கு கூறிவைக்க விரும்புகின்றோம்.