ஜனாதிபதி, பிரதமருக்கு தேர்தல்கள் ஆணைக்குழு கடிதம்

தேர்தல்கள் ஆணைக்குழுவிலிருந்து ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு கடிதம்

by Staff Writer 17-01-2019 | 7:33 AM
Colombo (News 1st) மாகாணசபைத் தேர்தலை விரைவில் நடாத்துவதற்கு பாராளுமன்றத்தில் தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் கடந்த 11ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களும் குறித்த கோரிக்கை கடிதத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கான 4 வழிமுறைகள் தொடர்பில் கட்சித் தலைவர்களின் கூட்டத்தின்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. குறித்த மாற்று யோசனைகளை அமுல்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பாராளுமன்றம் செயற்படவேண்டிய அவசியம் தொடர்பில் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, மாகாணசபைத் தேர்தலை விருப்புவாக்கு முறையில் நடாத்துதல், கலப்பு முறையில் நடாத்துதல் என்பன தொடர்பான கொள்கைகளை வகுப்பது குறித்து ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசியல் கட்சிகளின் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. தற்போது காணப்படும் சிக்கல் நிலைமைக்குத் தீர்வு காணும் பட்சத்தில் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் மாகாணசபைத் தேர்தலை நடாத்த முடியும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.