அம்பாறையில் 14,500 ஏக்கர் சோளப் பயிர்செய்கை அழிவு

by Staff Writer 17-01-2019 | 7:18 PM
Colombo (News 1st) படைப்புழுவின் தாக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்றும் நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் அவ்வாறான பல பகுதிகளுக்குச் சென்றிருந்தனர். மொனராகலை - முல்லேகம பகுதி விவசாயிகளும் அனுராதபுரம் - எலயாபத்துவ கிராம விவசாயிகளும் படைப்புழு தாக்கத்தால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். அம்பாறை - மஹஓயா, நில்ஒப கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களிலும் படைப்புழு பரவியுள்ளதுடன், அதனைக் கட்டுப்படுத்த விவசாய அதிகாரிகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இங்கு 22,000 ஏக்கரில் சோளம் பயிரிடப்பட்டுள்ளதுடன், அதில் 14,500 ஏக்கர் பயிர்செய்கை அழிவடைந்துள்ளது. மட்டக்களப்பு - செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட புல்லுமலை, வெடிக்காகண்டி, கரடியனாறு, இழுப்படிச்சேனை, கித்துல் கிராமங்களிலும் சோளப் பயிர்செய்கையை படைப்புழு தாக்கியுள்ளது. அத்துடன், வெண்டைக்காய், பயத்தங்காய் போன்ற செய்கைகளையும் படைப்புழு தாக்கியுள்ளது. கேகாலை மாவட்டம் ருவான்வெல்லை - அமிதிரிகல பிரதேசத்திலும் படைப்புழு சோளப் பயிர்செய்கையை அழித்துள்ளது. சுமார் 5 ஏக்கர் சோளப் பயிர்செய்கை இங்கு அழிவடைந்துள்ளது.