கைதிகளைத் தாக்கியமை குறித்து ஆராய விசேட குழு

அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகளைத் தாக்கியமை குறித்து ஆராய விசேட குழு

by Staff Writer 17-01-2019 | 7:06 AM
Colombo (News 1st) அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை அதிகாரிகள், கைதிகள் சிலரை தாக்கியமை தொடர்பில் ஆராய்வதற்கு விசேட குழுவொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. குறித்த காட்சி ஔிப்பதிவாகியுள்ள பாதுகாப்புக் கெமராவில் பதிவாகியுள்ள அனைத்து காட்சிகளையும் தாம் உள்ளிட்ட குழுவினர் பார்வையிடவுள்ளதாக, விசாரணைக்காக நியமிக்கப்பட்டுள்ள மூவரடங்கிய குழுவின் தலைவர், சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல் தெனிய குறிப்பிட்டுள்ளார். குறித்த காணொளியை முழுமையாக பார்வையிட்டதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதேவேளை, அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகளை சித்திரவதைக்கு உள்ளாக்கியமை தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவின் அறிக்கையை எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னர் கோரியுள்ளதாக, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார். அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலைக்குள், சிறைச்சாலை அதிகாரிகளால் கைதிகளை நிலத்தில் முழந்தாழிடச் செய்து சித்திரவதைக்குள்ளாக்கிய சி.சி.ரி.வி. காணொளி வௌியாகியுள்ளதை அடுத்து இந்த விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இந்தச் சம்பவம் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.