பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் செயற்பாடுகள் சிறந்த முன்னுதாரணம்: மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் செயற்பாடுகள் சிறந்த முன்னுதாரணம்: மைத்திரிபால சிறிசேன தெரிவிப்பு

எழுத்தாளர் Staff Writer

17 Jan, 2019 | 8:08 pm

Colombo (News 1st) குற்றச்செயல்களையும் போதைப்பொருள் கடத்தலையும் தடுப்பதற்கு பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி முன்னெடுக்கும் செயற்பாடுகள் சிறந்த முன்னுதாரணம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்ஸூக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி, அந்நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்டேயை (RodrigoDuterte) சந்தித்த போதே இதனைக் கூறியுள்ளார்.

பிலிப்பைன்ஸூக்கு நான்கு நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு ஜனாதிபதியை நேற்று (16) மாலை சந்தித்தார்.

இதேவேளை, இலங்கையின் மூன்று திட்டங்களுக்கு 445 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கடன் வழங்குவற்கு ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் Takehiko Nakao இணங்கியுள்ளார்.

பிலிப்பைன்ஸூக்கு நான்கு நாள் அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மணிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கு இன்று விஜயம் செய்திருந்தார்.

இதன்போதே இந்த இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் 300 மில்லியன் அமெரிக்க டொலர் கொழும்பு துறைமுக நுழைவாயிலின் நிர்மாணப்பணிகளுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.

விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் மனித வள அபிவிருத்தித் திட்டங்களுக்காக மேலும் 145 மில்லியன் டொலரையும், நகர அபிவிருத்தி தொழில்நுட்ப உதவிக்காக 10 மில்லியன் டொலரையும் வழங்குவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி ஜனாதிபதிக்கு இணக்கம் தெரிவித்துள்ள 455 மில்லியன் டொலர் கடன் உதவி சலுகை அடிப்படையிலேயே கிடைக்கிறது.

எனினும், சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து 500 மில்லியன் டொலரை தவணை அடிப்படையில் பெற்றுக்கொள்வதற்கு நிதி அமைச்சர் வொஷிங்டன் சென்று பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

சர்வதேச நாணய நிதியம் கடும் நிபந்தனைகளுக்கு மத்தியிலே இந்த நிதியை வழங்கவுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்