2018 பிளாட்டினம் விருது வழங்கல் விழா: தேர்ஸ்டன் கல்லூரியில் ஆரம்ப நிகழ்வு

by Staff Writer 16-01-2019 | 9:10 PM
Colombo (News 1st) 2018 பிளாட்டினம் விருது வழங்கல் விழாவின் ஆரம்ப நிகழ்வு கொழும்பு தேர்ஸ்டன் கல்லூரியில் இன்று நடைபெற்றது. 2017 டிசம்பர் மாதம் முதல் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் வரை திறமையை வெளிப்படுத்திய நாட்டின் விளையாட்டு வீர, வீராங்கனைகளை கெளரவிக்கும் வகையில் பிளாட்டினம் விருது வழங்கல் விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2018 பிளாட்டின் விருது வழங்கல் விழாவின் ஆரம்ப நிகழ்வில் நியூஸ்ஃபெஸ்ட் அலைவரிசை பிரதானி சுரங்க சேனாநாயக்க, அலையன்ஸ் நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவின் ஆலோசகர் நந்தன விக்ரமகமே உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். பிளாட்டினம் விருது வழங்கல் விழாவில் இம்முறை 20 விருதுகளும் 10 பதக்கங்களும் வழங்கப்படவுள்ளன. இலங்கைக்கு பெருமை சேர்த்த ஓட்ட வீராங்கனை தமயந்தி தர்ஷா மற்றும் கார் பந்தய வீரர் டிலந்த மாலகமுவவும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். கொழும்பில் இன்று ஆரம்பமான பவனி நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் பயணிக்கவுள்ளது. அடுத்த மாதம் 10 ஆம் திகதி வரை இந்த பவனி முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதற்கு இணையாக தெரிவு செய்யப்பட்ட 30 பாடசாலைகளில் விளையாட்டு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. அந்தந்த பிரதேசங்களில் திறமையை வெளிப்படுத்திய வீர வீராங்கனைகளுக்கும் இதன்போது விருதுகள் வழங்கப்படவுள்ளன. கொழும்பு மாவட்டத்தின் சிறந்த வீரருக்கான தங்கப்பதக்கத்தை பம்பலப்பிட்டி புனித பீட்டர்ஸ் கல்லூரியின் நீச்சல் வீரர் அகலங்க பீரிஸ் வெற்றி கொண்டதுடன், வெள்ளிப்பதக்கம் மெய்வல்லுனர் வீராங்கனை ஷெலின்டா ஜென்ஸ்டனுக்கு வழங்கப்பட்டது. வெண்கலப்பதக்கத்தை பட்மின்டன் வீராங்கனை ஹசினி அம்பலன்கொட வெற்றி கொண்டார்.