பிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்குகளால் தோற்கடிப்பு

பிரெக்ஸிட் ஒப்பந்தம் 230 வாக்குகளால் தோற்கடிப்பு

by Staff Writer 16-01-2019 | 7:44 AM
பிரதமர் தெரேசா மேயின் பிரெக்ஸிட் ஒப்பந்தம், பிரித்தானிய பாராளுமன்றத்தில் 230 வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் நடப்பு அரசாங்கமொன்றின் ஒப்பந்த சட்டமூலத்திற்குக் கிடைத்த பாரிய தோல்வியாக இது கருதப்படுகின்றது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா, எதிர்வரும் மார்ச் மாதம் 29 ஆம் திகதி விலகுவது தொடர்பிலான தீர்மானமிக்க இறுதி வாக்கெடுப்பு நேற்று பிரித்தானிய பாராளுமன்றத்தில் நடாத்தப்பட்டது. இதனையடுத்து, ஒப்பந்த சட்டமூலத்திற்கு ஆதரவாக 202 வாக்குகளும் எதிராக 230 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான பிரெக்ஸிட் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்த கடந்த 2 வருடங்களாக போராடிவரும் பிரதமர் தெரேசா மேயிற்கு இது பெரிய அடி என அரசியல் விமர்சகர்கள் குறிப்பிட்டுள்ளனர். பிரெக்‌ஸிட் ஒப்பந்தம் மீதான வாக்கெடுப்பு கடந்த டிசம்பர் மாதத்தில் இடம்பெறவிருந்த நிலையில், பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் தெரேசா மே இதனைத் தாமதப்படுத்தினார். இ​தேவேளை, தொழிற்கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பைன் அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லா தீர்மான பிரேரரணை ஒன்றை கொண்டுவந்துள்ளார். இது பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கலாம் எனவும் கூறப்படுகின்றது. இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.