by Staff Writer 16-01-2019 | 8:14 PM
Colombo (News 1st) படைப்புழுவின் தாக்கம் காரணமாக பல பகுதிகளில் செய்கையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் ஆராய்வதற்காக நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் மூன்று மாவட்டங்களுக்குச் சென்றுள்ளனர்.
பயிர்செய்கைகளுக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ள படைப்புழுக்கள் அமெரிக்காவில் உருவாகி ஆபிரிக்கா மற்றும் இந்தியாவிலுள்ள விவசாய நிலங்களை ஆக்கிரமித்துள்ளன.
இந்தியா ஊடாக, கடந்த ஒக்டோபர் மாதமளவில் இலங்கையின் விவசாய நிலங்களில் இந்த படைப்புழுக்கள் பரவியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.
அம்பாறையின் சோளச் செய்கையை துவம்சம் செய்த இந்த படைப்புழுக்கள் தற்போது அநுராதபுரம், குருநாகல், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் வியாபித்துள்ளன.
நாடளாவிய ரீதியில் அனைத்து உணவு செய்கைகளுக்கும் இந்த புழுக்கள் அச்சுறுத்தலாக அமையும் என விவசாய ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலைமையை ஆராய்வதற்காக நியூஸ்ஃபெஸ்ட்டின் மூன்று குழுக்கள் மூன்று மாவட்டங்களுக்குச் சென்றுள்ளன.
அநுராதபுரம் - துருவில பகுதியில் 4 ஏக்கர் சோளப் பயிர்ச்செய்கை அழிவடைந்துள்ளமையைக் காண முடிந்தது.
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் எல்லைக் கிராமமான கெவிலியாமடுவ கிராம மக்களும் படைப்புழு தாக்கத்தினை எதிர்கொண்டுள்ளனர்.
இந்த பகுதி மக்கள் 15,000 ஏக்கர் நிலப்பரப்பில் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் சோளப் பயிர்ச்செய்கையை மேற்கொண்டுள்ள போதிலும் படைப்புழுவின் தாக்கம் காரணமாக அவர்களின் எதிர்பார்ப்பு வீணாகியுள்ளது.
மொனராகலை - பிபில பிரதேசத்தின் பல பகுதிகளுக்கும் நியூஸ்ஃபெஸ்ட் குழுவினர் சென்று நிலைமையை பார்வையிட்டனர்.
இங்கு 300 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் பயிரிடப்பட்டுள்ள இடைநிலை பயிர்களை படைப்புழு தாக்கியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் 1,100 ஹெக்டெயர் நிலப்பரப்பில் பெரும்போக சோளச் செய்கை மேற்கொள்ளப்பட்டது.
படைப்புழுவின் தாக்கத்தினால் சுமார் 574 ஹெக்டெயர் சோளச் செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் எம்.பரமேஸ்வரன் தெரிவித்தார்.