இலங்கை - பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிகள் இடையே சந்திப்பு

இலங்கை - பிலிப்பைன்ஸ் ஜனாதிபதிகள் இடையே சந்திப்பு

by Staff Writer 16-01-2019 | 9:02 AM
Colombo (News1st) பிலிப்பைன்ஸிற்கு 4 நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அந்த நாட்டு ஜனாதிபதி ரொட்ரிகோ டுடர்டேவுக்கு இடையிலான சந்திப்பு இன்று (16) இடம்பெறவுள்ளது. பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் விசேட அழைப்பிற்கிணங்க, இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நேற்று இரவு ஜனாதிபதி பிலிப்பைன்ஸை சென்றடைந்தார். மணிலா நகரில் அமைந்துள்ள நினோ அக்குயுனா விமான நிலையத்தில் ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினரை பிலிப்பைன்ஸின் வர்த்தக மற்றும் முதலீட்டு அமைச்சர் வரவேற்றுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவு மற்றும் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் ஜனாதிபதியின் இந்த விஜயம் அமைந்துள்ளது. இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்படவுள்ளன. அத்துடன், இரு நாடுகளுக்கிடையில் நீண்ட காலமாகத் தொடரும் இராஜதந்திர ரீதியிலான தொடர்புகளைப் புதிய பரிணாமத்துடன் விஸ்தரிப்பது தொடர்பிலும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது. இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி, மணிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கும் செல்லவுள்ளதுடன் அதன் தலைவர் தகெஹிக்கோ நகாப்புடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளார். இதேவேளை, பிலிப்பைன்ஸில் அமைந்துள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிறுவகத்துக்கும் ஜனாதிபதி விஜயம் செய்யவுள்ளார். இலங்கைக்கும் பிலிப்பைன்சுக்கும் இடையிலான இராஜதந்திர தொடர்புகள் 1967 ஆம் ஆண்டில் ஆரம்பமானதுடன், 58 வருடங்களில் நாட்டின் அரச தலைவர் ஒருவருக்கு, பிலிப்பைன்ஸுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுக்கப்பட்ட முதற் சந்தர்ப்பம் இதுவாகும்.