அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் கைதிகள் மீது அதிகாரிகள் தாக்குதல்

by Bella Dalima 16-01-2019 | 8:38 PM
Colombo (News 1st) அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் சிறைச்சாலை அதிகாரிகள் கைதிகள் சிலரைத் தாக்கும் காட்சிகளை சிவில் அமைப்புகள் இன்று ஊடகங்களுக்கு வழங்கியிருந்தன. கடந்த நவம்பர் 22 ஆம் திகதி சிறைச்சாலையின் CCTV கெமராக்களில் இந்த காட்சிகள் பதிவாகியிருந்ததாக சிறைக் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது. விளக்கமறியல் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் சிறைக்கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழுவின் செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வா தெரிவித்ததாவது,
2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் 21 ஆம் திகதி அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையின் கைதிகள் நடத்திய ஆர்ப்பாட்டமே இதன் ஆரம்பமாகும். தம்மை பார்வையிட வரும் உறவினர்களின் ஆடைகள் களையப்பட்டு, அவர்கள் சோதனைக்குட்படுத்தப்பட்டதைக் கண்டித்தே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். இதனை உடனடியாக நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு, கைதிகள் சிறைச்சாலை அத்தியட்சகரை சந்தித்து கோரிக்கை விடுத்தனர். என்னால் எதனையும் செய்ய முடியாது, நீங்கள் பல்கலைக்கழக மாணவர்களைப் போன்று ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுங்கள் என இதன்போது அவர் கூறியதாக எமக்கு தகவல் கிடைத்துள்ளது. சிறைச்சாலை அத்தியட்சகரே அவர்களை ஆர்ப்பாட்டம் நடத்துமாறு ஆலோசனை கூறியுள்ளார்.
என சுதேஷ் நந்திமால் சில்வா குறிப்பிட்டார். அரச சொத்துக்களை சேதப்படுத்த வேண்டிய தேவை எமக்கில்லை எனவும் மனிதநேயமற்ற சோதனை நடவடிக்கைகளை நிறுத்துமாறு கைதிகள் கோரியதாகவும் சுதேஷ் நந்திமால் சில்வா மேலும் தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து எதிர்வரும் திங்கட்கிழமைக்கு முன்னதாக அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துக்கோரள சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனியவிற்கு ஆலோசனை வழங்கியுள்ளார். இன்னமும் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாகக் காணப்படாது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்களே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். நீதிமன்றத்தால் குற்றவாளியாகக் காணப்படும் வரை சுற்றவாளி என்ற இயற்கை நியதியை இந்த அதிகாரிகள் புரிந்துகொள்ளத் தவறியுள்ளனரா? அத்தகைய நிலைமையின் போதும், குற்றத்திற்கான தண்டனையை விதிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கே உள்ளது. தண்டனை வழங்கும் அதிகாரத்தை சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் கையிலேற்று செயற்படுத்த முடியுமா?

ஏனைய செய்திகள்