நெடுந்தீவு கடலில் மீட்கப்பட்ட தமிழக மீனவரின் சடலம் யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

நெடுந்தீவு கடலில் மீட்கப்பட்ட தமிழக மீனவரின் சடலம் யாழ். இந்திய துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைப்பு

எழுத்தாளர் Staff Writer

16 Jan, 2019 | 10:08 pm

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – நெடுந்தீவிற்கு அருகிலுள்ள கடற்பரப்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (13) சடலமாக மீட்கப்பட்ட இந்திய மீனவரின் பிரேதப் பரிசோதனை இன்று நடைபெற்றது.

யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேதப் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.

நீரில் மூழ்கியமையால் மீனவர் உயிரிழந்துள்ளமை பிரேதப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலை பணிப்பாளர் T.சத்தியமூர்த்தி குறிப்பிட்டார்.

பிரேதப் பரிசோதனையின் பின்னர் மீனவரின் சடலம் யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் இராமநாதபுரத்தைச் சேர்ந்த கருப்பையா முன்னுசாமி என்ற 55 வயதான மீனவரே கடந்த ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.

இலங்கை கடற்பரப்பில் விபத்திற்குள்ளான படகொன்றில் இருந்த 5 மீனவர்களை கடற்படையினர் மீட்டு அழைத்து வந்தபோது அவர்களின் படகு நீரில் மூழ்கியுள்ளது.

நீரில் மூழ்கிய 5 மீனவர்களையும் கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

இதன்போது, இந்திய மீனவர்களின் மற்றுமொரு படகில் இருந்தவர்கள் கடற்படையின் படகை மோதிவிட்டுத் தப்பிச்செல்ல முயன்றபோது அந்தப் படகு கவிழ்ந்துள்ளது.

படகில் இருந்த 3 மீனவர்களை கடற்படையினர் காப்பாற்றியுள்ளனர்.

பின்னர் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே மீனவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடற்படையினரால் மீட்கப்பட்ட 8 மீனவர்களும் ஊர்காவற்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

மீனவரின் சடலத்தை மீண்டும் தமிழகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அவரது உறவினர்கள் இராமேஸ்வரம் மீன் வளத்துறை அலுவலகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்