வேகமாகப் பரவி வரும் படைப்புழுக்களால் சுமார் 100 வகையான பயிர்ச்செய்கைகள் பாதிப்பு

by Staff Writer 15-01-2019 | 8:38 PM
Colombo (News 1st) சோளப் பயிர்ச்செய்கைகளில் வேகமாகப் பரவி வரும் படைப்புழு தாக்கம் தற்போது செய்கையாளர்களை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. இலங்கையில் சுமார் 100 வகையான பயிர்ச்செய்கைகளை இந்தப் புழு ஆக்கிரமித்துள்ளது. கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதற்தடவையாக இந்த படைப்புழு அம்பாறை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. சோளச் செய்கையில் துரிதமாக இந்த புழு பரவியதை கடந்த சில மாதங்களாக அவதானிக்க முடிந்தது. குறிப்பாக அம்பாறை, மொனராகலை, குருநாகல், அநுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இந்த படைப்புழு பரவி வருகிறது. இதனால் நாட்டில் 88,000 ஹெக்டயரில் பயிரிடப்பட்டுள்ள சோளச் செய்கையில் 50 வீதமான செய்கையை இந்தப் புழு ஆக்கிரமித்துள்ளது. சோளச் செய்கையில் பரவி வந்த படைப்புழுவின் தாக்கம் தற்போது குரக்கன், பயறு போன்ற செய்கைகளையும் பாதிக்க ஆரம்பித்துள்ளதை காலி மாற்றும் மாத்தறை பகுதிகளில் காண முடிகிறது. சில வருடங்களுக்கு முன்னர் முதன்முறையாக அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த படைப்புழு பின்னர் ஆபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆபிரிக்காவில் பல ஏக்கர் பயிர் நிலங்களை அழித்த இந்த படைப்புழு கடந்த வருடம் இந்தியாவில் பரவியது. எனவே, இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பரவி இருக்கலாம் என தற்போது சந்தேகிக்கப்படுகிறது. படைப்புழுவால் 100 கிலோமீட்டர் வரை பயணிக்க முடியும் என விவசாய ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த படைப்புழுவை கட்டுப்படுத்துவதற்கு பல நாடுகள் முயற்சிகளை மேற்கொள்கின்ற போதிலும், எந்தவொரு நாட்டிலும் அது வெற்றியளிக்கவில்லை. விவசாயத்துறையை பாதித்துள்ள இந்த தொற்று நிலைமையை எதிர்கொள்வது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என கருதிய நியூஸ்ஃபெஸ்ட் இன்றிலிருந்து மற்றுமொரு தேசிய திட்டத்தை ஆரம்பித்துள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்துடன் இணைந்து மூன்று விசேட ஆய்வுக்குழுக்கள் மொனராகலை, அம்பாறை மற்றும் அநுராதபுரம் மாவட்டங்களுக்கு புறப்பட்டுச் சென்றன. எதிர்வரும் நாட்களில் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு பயணித்து, இது தொடர்பில் பேராதனை பல்கலைக்கழகத்தின் ஒத்துழைப்புடன் விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள நியூஸ்ஃபெஸ்ட் தயாராகவுள்ளது.