by Staff Writer 15-01-2019 | 5:23 PM
Colombo (News 1st) சதொச நிறுவன விற்பனைப் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று கோட்டை மேலதிக நீதவான் சாலிய சன்ன அபேரத்ன முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டார்.
சந்தேகநபருக்கு எதிர்வரும் 22 ஆம் திகதி கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு இதன்போது நீதவான் அறிவுறுத்தியுள்ளார்.
போலி கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து சதொச நிறுவனத்தில் சேவையாற்றி வந்த விற்பனைப் பிரிவின் பிரதி பொது முகாமையாளர் கொழும்பு இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவினரால் நேற்று (14) கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் தாம் ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பட்டதாரி என தெரிவித்து குறித்த பதவியை வகித்து வந்துள்ளார்.
இதற்காக அவர் போலி ஆவணத்தை சமர்ப்பித்துள்ளதாக அரசின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
இவ்வாறு போலி கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பித்து சதொச நிறுவனத்தில் உயர் பதவிகளை வகித்த அதிகாரிகள் பலர் பதவி நீக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சதொச நிறுவனத்தில் சிரேஷ்ட முகாமையளர்களாகவும் பிரதி பொது முகாமையாளர்களாகவும் செயற்பட்டவர்களே இவ்வாறு பதவி நீக்கப்பட்டுள்ளதாக அவர் உறுதிப்படுத்தினார்.
அவர்களில் பல அதிகாரிகள் தாம் சர்வதேச பல்கலைக்கழகங்களில் பட்டங்களைப் பெற்றதாக போலி சான்றிதழ்களை சமர்ப்பித்துள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களான குறித்த அதிகாரிகள் தொடர்பிலான அடுத்தகட்ட விசாரணைகள் கொழும்பு இலஞ்ச ஊழல் விசாரணைப் பிரிவின் வழிநடத்தலில் கீழ் முன்னெடுக்கப்பட்டுள்ளன.