சீனாவிடமிருந்து 300 மில்லியன் டொலர் கடன்

சீனாவிடமிருந்து 300 மில்லியன் டொலர் கடன் பெறும் இலங்கை

by Staff Writer 15-01-2019 | 8:14 PM
Colombo (News 1st) இலங்கை சீனாவிடமிருந்து 300 மில்லியன் டொலர் கடனை பெறுவதற்கு தயாராவதாக ரொய்ட்டர் இன்று செய்தி வௌியிட்டுள்ளது. இந்த தொகையை 1000 மில்லியன் டொலராக அதிகரிக்கும் இயலுமை உள்ளதாகவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை இந்த வருடத்தில் பாரிய தொகை வௌிநாட்டுக் கடனை செலுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, சர்வதேச கடன் தரப்படுத்தலில் இலங்கை தொடர்ந்தும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது. இவ்வாறான பிரச்சினைகள் உருவாகியுள்ள பின்புலத்திலேயே மீண்டும் சீனாவிடம் கடன் பெறுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. சீனாவிடமிருந்து பெறவுள்ள கடன் தொடர்பில் நிதியமைச்சிடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. சீன வங்கியொன்றில் இருந்து 300 மில்லியன் கடனை பெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெறுவதாக நிதியமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார். அது தொடர்பில் கலந்துரையாடுவதற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். ஜனவரி 09 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வௌிநாட்டவர்கள் இலங்கையின் பிணை முறிகளில் முதலீடு செய்திருந்த 3600 மில்லியன் ரூபாவை நீக்கிக்கொண்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் தரவுகளின் படி அறியக்கிடைத்துள்ளது. இந்த வாரம் பங்குச்சந்தையில் வௌிநாட்டு முதலீட்டாளர்களின் 753 மில்லியன் ரூபா பங்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதன்படி, இந்த வாரத்தில் மாத்திரம் இலங்கையில் இருந்து 4353 மில்லியன் ரூபா நிதி வௌியே கொண்டுசெல்லப்பட்டுள்ளது. கடந்த வருடத்தில் இலங்கையின் பிணை முறிகளில் முதலீடு செய்திருந்த 160 பில்லியன் ரூபா நீக்கிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. அதன்படி, 2018 டிசம்பர் 31 ஆம் திகதியாகும் போது நாட்டில் காணப்படும் வௌிநாட்டு இருப்பு 6936 மில்லியன் டொலராக குறைவடைந்துள்ளது.