இன்று தைத்திருநாள் உலகத் தமிழர்களால் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகிறது

by Staff Writer 15-01-2019 | 3:23 PM
Colombo (News 1st) உலக செழிப்பின் காரணகர்த்தாவான சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் பண்டிகையான தைத்திருநாளை இன்றைய தினம் உலகத் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். ''உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்'' என்ற பாரதியின் வாக்கிற்கு வடிவம் தரும் நாள் தைப்பொங்கல் திருநாள். தமிழ் மாதங்களில் தை மாதத்தின் முதல் நாள் இன்றாகும். சூரியன் தன் வான்வழிப் பயணத்தில் மகர ராசிக்கு மாறும் நாள் இது. உத்தராயணத்தில் சூரியன் வடக்கு நோக்கி நகரும் மாதமான மகர மாதம் முதலில் வருகிறது. இதன் முதல் நாள், ‘மகர சங்கராந்தி’ என்றும், ‘தைப்பொங்கல்’ என்றும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் என்பதற்கு பொங்கிப் பெருகி வருவது என்று பொருள்.
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை
என்றான் வள்ளுவன். பல தொழில்கள் செய்து வந்தாலும், ஏரால் உழுது பயிர் விளைவிக்கும் உழவுத்தொழிலைச் சார்ந்தே உலகத்தார் வாழவேண்டியிருக்கிறது என்று பொருள். உழைக்கும் மக்கள் தமது உழைப்பிற்கு உதவிய இயற்கைக்கும், தம்மோடு சேர்ந்து உழைத்த கால்நடைகளுக்கும் தமது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவிக்கும் விதமாக தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்றனர். பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்துள்ள பொங்கல் பண்டிகை இன்று உலகத் தமிழர்களின் உணர்வோடு கலந்த ஒரு பண்டிகையாக மாறியுள்ளது.