உலக நாடுகளின் தலைவர்கள் தைப்பொங்கல் வாழ்த்து

உலக நாடுகளின் தலைவர்கள் தைப்பொங்கல் வாழ்த்து

by Staff Writer 15-01-2019 | 3:47 PM
Colombo (News 1st) உலகவாழ் தமிழர்களின் திருநாளாகிய தைப்பொங்கலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர். கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே ஆகியோர் காணொளி மூலம் தமது தைப்பொங்கல் வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளனர். 2016 ஆம் ஆண்டு பிரித்தானிய பொதுமக்கள் சபை, தை மாதத்தை பாரம்பரிய மாதமாகப் பிரகடனப்படுத்தியிருந்ததாகவும், கனடாவிலுள்ள தமிழர்களின் பாரம்பரியத்தை கட்டிக்காக்க அனைவரும் முன்வரவேண்டுமெனவும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தமது வாழ்த்துச் செய்தியில் வலியுறுத்தியுள்ளார். கனடாவின் வளர்ச்சிக்கு தமிழர்கள் வழங்கும் பங்களிப்பினை நினைவுகூர்ந்த கனேடிய பிரதமர், 150 ஆவது ஆண்டு நிறைவை இந்த வருடத்தில் கொண்டாடவுள்ள கனடா அனைத்து இனத்தவர்களுடைய கலாசாரங்களையும் மதித்து, அனைவரும் வாழக்கூடிய சிறந்த நாடாக அமைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதனிடையே பிரித்தானியாவில் வாழும் தமிழர்களுக்கு தமது தைப்பொங்கல் வாழ்த்துக்களை பிரித்தானிய பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார். தமது கடுமையான உழைப்பு, தியாகம் மற்றும் தாராள மனப்பான்மையால் பிரித்தானியாவை உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் பிரித்தானியவாழ் தமிழர்களுக்கு அவர் தமது பாராட்டுதல்களைத் தெரிவித்துள்ளார்.