யார் இந்த சிவில் செயற்பாட்டாளர்கள்?

by Staff Writer 12-01-2019 | 10:44 PM
Colombo (News 1st) சிவில் அமைப்பினர் என்ற நாமத்துடன் தம்மைத்தாமே அடையாளப்படுத்திக் கொண்டு பல்வேறு தரப்பினர் கொழும்பின் நாலா திசைகளிலும் பாரிய அளவில் வேர்விட்டு கிளை பரப்பி செயற்படுவதை இந்நாட்களில் காணக்கூடியதாக உள்ளது. சிறந்த நோக்குடன் உருவாக்கப்பட்டு செயற்படுகின்ற, அரசில் பதிவு செய்யப்பட்ட, உண்மையிலும் மக்கள்மயப்படுத்தப்பட்ட பல சிவில் அமைப்புக்கள் காணப்படுகின்றன. எனினும், சில நிறுவனங்களின் பின்புலத்தில் யார் உள்ளனர் என மக்கள் தற்போது கேள்வி எழுப்பியுள்ளனர். அண்மையில் இடம்பெற்ற அரசியல் நெருக்கடியின் போது ரணில் விக்ரமசிங்கவின் அடிவருடிகளாக செயற்பட்ட, இதற்கு முன்னர் கேள்விப்படாத பல்வேறு அமைப்புகளிடமிருந்து பணத்தைப் பெற்றுக்கொண்டு பின்னர் அற்ப ஆசைகளுக்காக அரசியல் நிகழ்ச்சி நிரல்களைத் தயாரித்து குரல் எழுப்பியமையை அண்மையில் காணக்கூடியதாக இருந்தது. இவர்கள் உண்மையில் மக்களுக்கான சிவில் செயற்பாட்டாளர்களா? அல்லது மக்களின் உரிமைகளை தாரைவார்ப்பவர்களா? இலங்கை வரலாற்றில் மிகவும் கீழ்த்தரமான பாரியளவிலான ஊழலாகக் கருதப்படும் மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரத்திற்கு எதிராக இதிலுள்ள எந்தவொரு சிவில் அமைப்பினரும் மழையில் நனைந்து குரல் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தார்களா என்பது கேள்விக்குறியே. தமக்கு நெருக்கமானவர்களை பதவிகளில் அமர்த்தி, நாட்டின் ஜனரஞ்சகமான வானொலி சேவையில் மூன்று வருடங்களுக்குள் 57 பில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்தியபோது இந்த சிவில் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனரா? ஏனைய நாடுகளுடன் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடும்போது நிவாரண அடிப்படையில் கடனைப் பெறுவதற்குப் பதிலாக பல பில்லியன் கணக்கில் நாட்டுக்கு நட்டம் ஏற்படுத்தும் அதிக வட்டியிலான வணிகக் கடனைப் பெற்ற போது இந்த சிவில் செயற்பாட்டாளர்கள் சோம்பிக்கிடந்தனரா? நீங்கள் வேலையற்றவராக வாழ்க்கைச் சுமையுடன் இயற்கை அனர்த்தத்தில் சிக்கியிருந்த போது, குடிப்பதற்கு சுத்தமான குடிநீர் இல்லாது இருந்தபோது, கல்வி கற்பதற்கான உரிய சந்தர்ப்பம் இல்லாதபோது, பயங்கரவாதத்தில் இன்னல்களை எதிர்நோக்கிய வேளையில், சிவில் செயற்பாட்டாளர்கள் என தம்மை அறிமுகம் செய்து கொண்டவர்கள் இவை பற்றி அறியாதிருந்தனரா? இவர்களின் எதிர்ப்பார்ப்பு என்ன?