பஸ் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது 

பஸ் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது: தனியார் பஸ் சங்கங்கள் தெரிவிப்பு

by Bella Dalima 12-01-2019 | 3:38 PM
Colombo (News 1st) எரிபொருளின் விலை குறைவடைந்தமைக்கு இணையாக பஸ் கட்டணம் குறைக்கப்பட மாட்டாது என தனியார் பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ளன. இரண்டு ரூபாவினால் எரிபொருளின் விலை குறைவடைந்துள்ளதால், பஸ் கட்டணங்களில் மாற்றங்கள் ஏற்படாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டார். இதேவேளை, எரிபொருள் விலை குறைவடைந்தமை குறித்து கலந்துரையாடல் இடம்பெறுவதாக மாகாணங்களுக்கிடையிலான பஸ் சங்கத்தின் தலைவர் சரத் விஜித்த குமார தெரிவித்தார். பெட்ரோல் மற்றும் டீசலின் விலை 2 ரூபாவினால் குறைக்கப்பட்டதற்கு அமைய, பஸ் கட்டணத்தை குறைப்பதற்கான சந்தர்ப்பம் இல்லை எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார். எவ்வாறாயினும், எரிபொருளின் விலை அதிகரிக்குமாயின், பஸ் கட்டணத்தை உடனடியாக அதிகரிப்பதற்கு முனைப்பு காட்டும் பஸ் உரிமையாளர்கள், எரிபொருளின் விலை குறைவடையுமாயின் பஸ் கட்டணத்தைக் குறைப்பதற்கு தயங்குவதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் குற்றஞ்சுமத்தியுள்ளது. கடந்த 3 சந்தர்ப்பங்களில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்ட போதிலும், 4 வீதத்தால் மாத்திரமே பஸ் கட்டணம் குறைக்கப்பட்டதாக சங்கத்தின் செயலாளர் ஜி.பரணவிதான தெரிவித்தார். எரிபொருளின் விலை குறைவடைந்ததன் பயனை பயணிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கம் மேலும் குறிப்பிட்டது. நேற்று முன்தினம் (10) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒக்டேன் 92 மற்றும் 95 ரக பெட்ரோல் ஒரு லிட்டரின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.