இவ்வருட இறுதிக்குள் மேலும் மூன்று அதிவேக வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளன

இவ்வருட இறுதிக்குள் மேலும் மூன்று அதிவேக வீதிகள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளன

எழுத்தாளர் Staff Writer

12 Jan, 2019 | 8:59 pm

Colombo (News 1st) இந்த வருட இறுதிக்குள் இலங்கையின் அதிவேக வீதிக்கட்டமைப்பில் மேலும் 145 கிலோமீட்டர் அதிகரிக்கப்படவுள்ளது.

தெற்கு அதிவேக வீதியின் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான 96 கிலோமீட்டர் பகுதி இந்த வருடத்தின் ஆகஸ்ட் மாதத்திற்குள் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த அதிவேக வீதியின் முற்கட்டமாக 30 கிலோமீட்டர் நீளம் கொண்ட மாத்தறையிலிருந்து பெலிஅத்த வரையான பகுதி எதிர்வரும் ஜூலை மாதம் மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படவுள்ளது.

மூன்று சீன நிறுவனங்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த அதிவேக வீதியில் ஹம்பாந்தோட்டை வரை 6 பிரதான நுழைவாயில்கள் அமைந்துள்ளன.

கொழும்பு வெளியேற்றத்திற்கான சுற்றுவட்ட வீதிக்கட்டமைப்பின் நிர்மாணப்பணிகள் இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.

இதன் இறுதிக்கட்டமாக கடவத்தையிலிருந்து கெரவலப்பிட்டிய வரையான 9.63 கிலோமீட்டர் பகுதி எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் நிறைவு செய்யப்படவுள்ளது.

இதன் நிர்மாணப்பணிகள் 2016ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன.

இந்த வெளியேற்ற சுற்றுவட்ட வீதி நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர், தெற்கு அதிவேக வீதி மற்றும் கட்டுநாயக்க அதிவேக வீதி ஆகியன இணையவுள்ளன.

அத்துடன், மத்திய அதிவேக வீதியின் கடவத்தை நுழைவாயிலும் இதற்கமைய நிறைவு செய்யப்படவுள்ளது.

இதேவேளை, மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டமான மீரிகமவிலிருந்து குருநாகல் வரையுள்ள 40 கிலோமீட்டர் வீதியின் நிர்மாணப்பணிகள் இந்த வருடத்தின் டிசம்பர் மாதத்திற்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.

15 உள்நாட்டு நிறுவனங்களால் இந்த நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்படுவதுடன், இதற்காக 140 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2016 ஆம் ஆண்டு நவம்பர் மாத ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்டம், இந்த வருட இறுதிக்குள் நிறைவு செய்யப்படவுள்ளது.

எனினும், முதற்கட்டம் நிறைவு செய்யப்படும் காலம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இதேவேளை, மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை வரையான தெற்கு அதிவேக வீதியில் முன்னெடுக்கப்படும் நிர்மாணப்பணிகள் காரணமாக, ஹம்பாந்தோட்டை – சூரியவெவ 550ஆம் பிரிவு மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியமை தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் செய்திகளில் நேற்று சுட்டிக்காட்டியிருந்தது.

அந்த மக்களுக்கு பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு முன்னர் நட்ட ஈடு பெற்றுக்கொடுக்கப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிஹால் சூரியஆரச்சி தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்