மக்கள் மீது சுமையைத் திணிக்காது செயற்பட முயற்சி

மக்கள் மீது சுமையைத் திணிக்காது செயற்பட முயல்கிறோம் - பிரதமர்

by Bella Dalima 10-01-2019 | 1:24 PM
Colombo (News 1st) பாரிய செலவுகள் ஏற்பட்ட போதும் மக்கள் மீது சுமையைத் திணிக்காது செயற்பட்டதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். 2019 ஆம் ஆண்டின் மொத்தக் கடனின் பெறுமதி 5,900 அமெரிக்க டொலர்களாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், இக்கடன் தமது அரசாங்கம் பெற்றுக்கொண்ட கடனல்ல என பிரதமர் சுட்டிக்காட்டினார். ஜனவரி மாதம் 14 ஆம் திகதி கடனுக்கான தொகையாக 2,600 அமெரிக்க டொலர்களை செலுத்த வேண்டியிருப்பதாகவும் இதுவே இலங்கை வரலாற்றில் செலுத்தப்படும் அதிகூடிய தொகை எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். மேலும், 51 நாட்கள் நிலவிய அரசியல் குழப்பநிலை காரணமாக இலங்கையின் பொருளாதாரம் பாரிய தளம்பல் நிலைக்கு முகம் கொடுத்ததாகக் குறிப்பிட்ட பிரதமர், இலங்கை ரூபாவின் பெறுமதி 3.8 வீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளமையையும் கடந்த ஒக்டோபர் 26ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 16 ஆம் திகதி வரை திறைசேரியில் 312.9 மில்லியன் வெளியேற்றத் தொகை பதிவாகியுள்ளதையும் எடுத்துக்காட்டினார். அத்துடன், இலங்கையின் வௌிநாட்டு நிதியீட்டம் 79,991 மில்லியன் டொலரிலிருந்து 6985.4 மில்லியன் டொலர்களாக வீழ்ச்சியடைந்ததாகவும், பாரிய செலவுகள் ஏற்பட்டுள்ள இந்த சந்தர்ப்பத்தில் கூட அச்சுமையை மக்கள் மீது திணிக்காமல் செயற்பட தாம் முயல்வதாக சபாநாயகருக்கு ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்தியன் ரிசர்வ் வங்கி 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை மத்திய வங்கிக்கு வழங்குவதற்கு முன்வந்துள்ளது. அதேபோன்று, சீன பண்டா பிணை முறிகள் மற்றும் ஜப்பான் சாமுராய் பிணை முறிகளிடமிருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களைப் பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளோம். சர்வதேச நாணயப் பேரவையிலிருந்து 1 பில்லியன் டொலர்களைப் பெறலாம் என நம்புகின்றோம்
எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இதேவேளை, சீனன்குடா துறைமுகம், மத்தளை விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் கொழும்பு கிழக்கு வாயிலை விற்று 400 மில்லியன் அமெரிக்க டொலர்களை இந்திய ரிசர்வ் வங்கிக்கு வழங்குவதற்கு ​சம்மதமா என பிரதமரிடம் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கேள்வியெழுப்பினார்.

ஏனைய செய்திகள்