நியூஸ்ஃபெஸ்ட் முன்பாக முகங்களை மறைத்துக்கொண்டு சிலர் ஆர்ப்பாட்டம்

by Bella Dalima 10-01-2019 | 2:00 PM
Colombo (News 1st) நியூஸ்ஃபெஸ்ட் தலைமைக் காரியாலயத்தின் முன்பாக, சிவில் அமைப்பு என அடையாளப்படுத்திக்கொண்ட குழுவினர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கறுப்பு நிற ஆடையணிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் முகங்களை மறைத்தவாறு தமது எதிர்ப்பை வௌிப்படுத்தியிருந்தனர். ஆரம்பத்தில் அறவழிப் போராட்டம் எனக் கூறியவாறு வந்த ஆர்ப்பாட்டக்காரர்கள், கடிதம் ஒன்றை கையளிக்க முற்பட்டனர். அவர்களின் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படாத சந்தர்ப்பத்தில், அவர்கள் விரல்களை நீட்டி அச்சுறுத்தல் விடுத்தனர். ஆனால், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதான அறைகூவலுடன் வந்த இவர்கள் அனைவரும் ஏன் தமது முகங்களை மறைத்துள்ளார்கள் என்பது தொடர்ந்தும் கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரைத்துறையினர், சகோதர மொழிக் கலைஞர்கள் உள்ளிட்ட சிலரும் பங்கேற்றமை குறிப்பிடத்தக்கது. இந்தக் குழுவினர் வேறு சில ஊடக நிறுவனங்களுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அரசியல்வாதிகள் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஸ, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச, முன்னாள் பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி உள்ளிட்ட அரசியல்வாதிகள் சிலர் ஊடக நிறுவனங்கள் முன்பாக முன்னெடுக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு தமது கண்டனங்களை வௌியிட்டுள்ளனர். இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரையும் அவர்களின் பின்னணியில் இருப்போரின் அடையாளங்களையும் நியூஸ்ஃபெஸ்ட் மக்களுக்கு வௌிப்படுத்தத் தயாராகவுள்ளது. முகங்களை மூடியவாறு எவ்வித அறிவிப்புகளுமின்றி ஊடக நிறுவனங்கள் முன்பாகக் கூடுவது அந்நிறுவனங்களுக்கு விடுக்கப்படும் பெரும் அச்சுறுத்தலாக அமையும். இந்நிலையில், குறித்த குழுவினர் சிலோன் டுடெ நிறுவனம் முன்பாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மவ்பிம பத்திரிகை நிறுவனத்திற்கு முன்பாகக் கூடிய இவர்கள் கோரிக்கை அடங்கிய கடிதமொன்றை கையளிக்க முயன்றுள்ளனர். மவ்பிம பத்திரிகை நிறுவனமும் அவர்களது கடிதத்தை ஏற்க மறுத்துள்ளது. இதேவேளை, ஊடக நிறுவனத்திற்கு எதிராக கறுப்பு துணியால் முகத்தை மூடியிருந்த குழுவினருக்கு மவ்பிம ஊடக நிறுவனத்தின் ஊடகவியலாளர்கள் மற்றும் பணியாளர்கள் தமது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளனர்.