கறுப்புத் துணியால் முகங்களை மறைத்துக்கொண்ட சிலர் நியூஸ்ஃபெஸ்ட் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம்

கறுப்புத் துணியால் முகங்களை மறைத்துக்கொண்ட சிலர் நியூஸ்ஃபெஸ்ட் உள்ளிட்ட ஊடக நிறுவனங்கள் முன்பாக ஆர்ப்பாட்டம்

எழுத்தாளர் Staff Writer

10 Jan, 2019 | 7:45 pm

Colombo (News 1st) கறுப்பு ஆடைகளுடனும் கறுப்புத் துணியால் முகங்களை மறைத்துக்கொண்டும் சிலர் இன்று முற்பகல் நியூஸ்ஃபெஸ்ட் தலைமையகத்திற்கு முன்பாகக் கூடினர்.

பிரதமர் மற்றும் பிமல் ரத்நாயக்க ஆகியோர் கறுப்பு ஊடகம் தொடர்பில் கருத்துத் தெரிவித்து 20 நாட்களின் பின்னரே, ஊடகத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இவர்கள் வருகை தந்திருந்தனர்.

இன்று பகல் 12 மணியளவில் நியூஸ்ஃபெஸ்ட் தலைமையகத்திற்கு முன்பாக எதிர்ப்பு நடவடிக்கை ஆரம்பமானது.

இதில் பங்கேற்றவர்கள் தொடர்பில் அவர்கள் சுமந்திருந்த பதாகைகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவர்கள் இலங்கையின் பெண்கள், அளுத் பியாபத், அளுத் பரபுர, மாருதயே ஹன்ட, திதுலன ஹதவத்த, ஜனநாயகத்திற்கான வண்ணத்துப்பூச்சிகள், தொழில்சார் இணைய ஊடகவியலாளர்கள் சங்கம், சாது ஜனராவ, நெகீ சிட்டிமு ஶ்ரீ லங்கா, திரைப்பட இயக்குநர்கள் சங்கம், காணாமற்போனோரின் குடும்ப ஒன்றியம், ஜனநாயகத்திற்கான சட்டத்தரணிகள், சமபிம ஆகிய அமைப்புகளின் பெயர்களில் தம்மை அடையாளப்படுத்தியிருந்தனர்.

தாம் கொண்டு வந்திருந்த கடிதத்தை பொறுப்பேற்குமாறு இந்தக் குழுவினர் அழுத்தம் விடுத்தனர்.

இதனையடுத்து, இந்தக் குழுவினர் மவ்பிம பத்திரிகை அலுவலகத்திற்கு முன்பாகக் கூடினர்.

கறுப்பு ஆடையணிந்து முகத்தை மறைத்தவாறு சென்ற இந்தக் குழுவினருக்கு எதிராக மவ்பிம ஊழியர்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

ஆர்ப்பாட்டக் குழுவினர் ஒரு புறமாகவும், மவ்பிம ஊழியர்கள் மறுபுறமாகவும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டமையை காண முடிந்தது.

மவ்பிம ஊழியர்களின் கூச்சலுக்கு மத்தியில், எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று காலை முதல் பல ஊடக நிறுவனங்களுக்குச் சென்று இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டதை அவதானிக்க முடிந்தது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்