வடக்கு, கிழக்கு தொண்டர் ஆசிரியர்கள் கல்வி அமைச்சு முன்பாக உண்ணாவிரதம்

by Staff Writer 09-01-2019 | 8:29 PM
Colombo (News 1st) நிரந்தர நியமனம் வழங்குமாறு கோரி வடக்கு, கிழக்கு தொண்டர் ஆசிரியர்கள் கல்வி அமைச்சுக்கு முன்பாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனர். 200-க்கும் அதிகமான தொண்டர் ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட தொண்டர் ஆசிரியர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா சந்தித்தார். இந்த சந்திப்பின் போது சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா கூறியதாவது,
இந்த ஆசிரியர்கள் யுத்த காலத்தில் 10 வருடங்களுக்கும் மேலாக தொண்டர் அடிப்படையில் சேவையாற்றியவர்கள். கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் அவர்களுக்கான நேர்முகப் பரீட்சைக்கான கடிதங்கள் அனுப்பப்பட்டும், அண்மையில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் காரணமாக நேர்முகப் பரீட்சை நடத்தப்படவில்லை.
என குறிப்பிட்டார். கல்வி அமைச்சரை சந்திக்க வேண்டும் என தொண்டர் ஆசிரியர்கள் வலியுறுத்திய நிலையில், பொலிஸார் அவர்களுடன் கலந்துரையாடினர். இதனையடுத்து, கல்வி அமைச்சின் தொழிற்சங்க உறவுகளுக்கான உதவி செயலாளர் தொண்டர் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். கிழக்கு மாகாணத்தில் சுமார் 700 பேருக்கு நியமனம் வழங்கப்பட்டுள்ளதாகவும் எஞ்சியவர்களுக்கு நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவைப் பத்திரம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தொண்டர் ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும் அதிகாரம் ஆளுநர்களுக்கே உள்ளதாகவும் கல்வி அமைச்சின் உதவி செயலாளர் பத்மப்பிரிய குறிப்பிட்டார். எனினும், போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்ட நிலையில், கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் வருகை தந்து கலந்துரையாடினார். இதனையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.