மேல் மாகாணத்திலுள்ள கிராமிய வைத்தியசாலைகளில் ஆய்வு

மேல் மாகாணத்திலுள்ள கிராமிய வைத்தியசாலைகளில் ஆய்வுகூட வசதி

by Staff Writer 09-01-2019 | 7:31 AM
Colombo (News 1st) மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து கிராமிய வைத்தியசாலைகளிலும் இந்த வருடத்தில் ஆய்வுகூட வசதிகளை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக மேல் மாகாண சுகாதாரத் திணைக்களம் தெரிவித்துள்ளது. நோயாளர்களுக்கு இரத்தப் பரிசோதனை மற்றும் இரசாயனப் பரிசோதனைகளை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் உள்ள அனைத்து ஆரம்ப வைத்தியசாலைகள், சிறிய மற்றும் கிராமிய வைத்தியசாலைகளில் இந்த வருடம் முதல் ஆய்வுகூட வசதிகளை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளோம். தற்போது நோயாளர்கள் பரிசோதனைகளை மேற்கொள்வதாயின் ஆதார வைத்தியசாலைகளுக்கு செல்லவேண்டிய நிலையே காணப்படுகின்றது. எனவே, இந்த நிலைக்கு முகங்கொடுக்காமல் கிராமிய வைத்தியசாலைகளிலேயே அனைத்து இரசாயன ஆய்வுகளையும் மேற்கொள்வதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இரத்தப் பரிசோதனை மேற்கொண்டு ஒரு நாளுக்குள் அறிக்கையைப் பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது என சுகாதார சேவைகள் பணிப்பாளர், டாக்டர் அனில் ஜயசிங்க தெரிவித்துள்ளார்.