தனியார் விமானத்தில் பயணித்தவர்கள் முதலீட்டாளர்களா? மோசடிக்காரர்களா?

by Staff Writer 09-01-2019 | 7:52 PM
Colombo (News 1st) சீனா, சிங்கப்பூர் மற்றும் ஹொங்கொங் முதலீட்டாளர்களை ஏற்றிய கல்ஃப் ஸ்ட்ரீம் 550 ரக தனியார் விமானம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (06) இலங்கையை வந்தடைந்தது. முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம, அவரின் மகன் உள்ளிட்ட குழுவினர் குறித்த முதலீட்டாளர்களை நாட்டிற்கு அழைத்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்த விடயம் தொடர்பிலான காரணிகள் தெளிவின்மையால், அது குறித்து பாதுகாப்பு அமைச்சின் சிவில் விமான சேவைகள் அதிகாரி மற்றும் குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் நியூஸ்ஃபெஸ்ட் வினவியது. குறித்த விமானத்தினூடாக நாட்டை வந்தடைந்தவர்கள் மீண்டும் திரும்பிச் செல்ல வேண்டும் என குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். எனினும், அலுவலர்கள் மூவருடன் 6 பயணிகள் ஜனவரி 3 ஆம் திகதி குறித்த விமானத்தில் நாட்டை வந்தடைந்த போதிலும், கடந்த 5 ஆம் திகதி ஐவர் மாத்திரமே நாட்டிலிருந்து வெளியேறியதாக பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டார். இதனடிப்படையில், முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மகன், விமானத்தில் நாட்டை வந்தடைந்ததுடன், அவர் நாட்டிலிருந்து வெளியேறிச் செல்லவில்லை. இந்த குழுவினர் இரண்டு நாட்கள் நாட்டில் தங்கியிருந்ததை பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. முதலீட்டு நடவடிக்கைக்காக இந்தக் குழுவினர் சிங்கப்பூரிலிருந்து நாட்டிற்கு வருகை தரவுள்ளதால் அதற்கான அனுமதியை வழங்குமாறு கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் வெளிவிவகார அமைச்சிடம் கோரியதாகவும், அதனடிப்படையில் அனுமதி வழங்குவதற்கான இயலுமை தொடர்பில் ஆலோசித்ததாகவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்தது. இந்த விமானப் பயணம் தொடர்பில் சில நாட்களுக்கு முன்னரே அனுமதி கோரியதாகவும், அது தொடர்பில் அனுமதி வழங்குவதற்கு காலம் தேவைப்பட்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டது. உடனடியாக அனுமதியை வழங்கும் இயலுமை இன்மையாலும், பல்வேறு சட்டத்தின் கீழ் இதற்கான அனுமதியை வழங்க வேண்டும் என்பதாலும் அனுமதியை வழங்குவதற்கு கால தாமதம் ஏற்பட்டதை குறித்த அதிகாரியின் கருத்து உறுதிப்படுத்துகின்றது. இந்த பயணம் தொடர்பில் முழுமையான பொறுப்பு வெளிவிவகார அமைச்சுக்கே உள்ளது. திருகோணமலை - சீனக்குடா கடற்படை முகாமிலிருந்து பயணித்த தனியார் விமானம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் உள்ளதா என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்தார். விமானத்தின் இலக்கத்தை அடையாளங்காணும் நடவடிக்கையின் பிரகாரம், இந்த விமானம் தொடர்பில் நியூஸ்ஃபெஸ்ட் ஆராய்ந்தது. இதன் பிரகாரம், ஹொங்கொங்கின் Century Ocean எனும் நிறுவனத்திற்கு இந்த விமானம் சொந்தமானது என தெரியவந்தது. Century Ocean நிறுவனமானது பணத்தை பதுக்கி வைத்திருத்தல் மற்றும் வரி ஏய்ப்பு உள்ளிட்ட மோசடிகள் தொடர்பில் பனாமா ஆவணத்தில் பெயரிடப்பட்ட நிறுவனமாகும். இந்த நிறுவனத்தின் பங்குதாரர்களான ச்சோ ஹூங்க் போல் மற்றும் ஜோசப் லாஓ லு ச்சன்க் ஹொங் ஆகியோரின் பெயர்களும் பனாமா ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் குறிப்பிடும் வகையில், இந்த நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அதன் பங்குதாரர்கள் பனாமா ஆவணத்தில் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பார்களாயின், விமானத்தில் பயணித்த வெளிநாட்டவர்கள் யார்? அவர்கள் மோசடிக்கார்களா என்பது தொடர்பில் குடிவரவு குடியகல்வு திணைக்களம் தகவல்களை வெளியிட வேண்டும்.