ஜாலிய விக்ரமசூரியவை கைது செய்ய மீண்டும் பிடியாணை

ஜாலிய விக்ரமசூரியவைக் கைது செய்யுமாறு மீண்டும் பகிரங்கப் பிடியாணை

by Staff Writer 09-01-2019 | 1:37 PM
Colombo (News 1st) அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரியவைக் கைது செய்வதற்கு இன்று (09) மீண்டும் பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரது பிணையாளர்கான மனைவி மற்றும் உறவுமுறை சகோதரி ஆகியோரைக் கைது செய்யுமாறும் இன்று பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கோட்டை பதில் நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அமெரிக்காவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவராக கடமையாற்றியபோது, இலங்கை அரசுக்கு சொந்தமான 1,32,000 அமெரிக்க டொலர் நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஜாலிய விக்ரமசூரிய, மருத்துவ சிகிச்சைகளுக்காக அமெரிக்காவுக்கு செல்வதற்காக பிணை வழங்கப்பட்டது. இதன்பின்னர், அவர் மீண்டும் நாட்டுக்கு வருகை தராதமையால் பிணையாளர்கள் மன்றில் ஆஜராகாமல் தவிர்த்து வருகின்றனர். இந்தநிலையில், நாடு கடத்தல் சட்டத்தின் கீழ் ஜாலிய விக்ரமசூரியவை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினர் இன்று மன்றில் அறிவித்துள்ளனர்.