இலங்கையுடனான ஒருநாள் தொடரில் நியூஸிலாந்து வெற்றி

இலங்கையுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து கைப்பற்றியது

by Staff Writer 08-01-2019 | 1:44 PM
Colombo (News 1st) இலங்கை அணியுடனான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை நியூஸிலாந்து அணி, 3 - 0 என்ற கணக்கில் இன்று கைப்பற்றியுள்ளது. இதனையடுத்து, தொடர்ச்சியாக ஆவது தடவையாகும் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை அணி இழந்துள்ளது. இரு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியில் நியூஸிலாந்து அணி 115 ஓட்டங்களால் வெற்றயீட்டியது. நெல்சனில் நடைபெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணித்தலைவர் லசித் மாலிங்க, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார். இன்றைய போட்டியில், தினேஷ் சந்திமால், அசேல குணரத்ன, சீக்குகே பிரசன்ன குழாத்திலிருந்து நீக்கப்பட்டு, தனஞ்சய டி சில்வா, தசுன் ஷானக்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இலங்கை அணியின் அழைப்பிற்கிணங்க முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 50 ஒவர்களில் 4 விக்கெட்களை இழந்து 364 ஓட்டங்களைப் பெற்றது. இது நெல்சன் மைதானத்தில் அணியொன்று குவித்த அதிக பட்ச ஓட்டங்களாகும். ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான மார்டின் கப்டில் 2 ஓட்டங்களுடனும் கொலின் முன்ரோ 21 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். அணித் தலைவர் கேன் வில்லியம்சன் தனது 35 ஆவது அரைச்சதத்தை பூர்த்தி செய்ததுடன், 55 ஓட்டங்களை பெற்றார். நியூஸிலாந்து அணி சார்பில் அதிக ஓட்டங்களைக் குவித்த ரொஸ் டெய்லர் 20ஆவது ஒருநாள் சதத்தை பூர்த்திசெய்ததுடன், 131 பந்துகளில் 9 பவுன்ட்ரிகள், 4 சிக்ஸர்கள் அடங்கலாக 137 ஒட்டங்களை பெற்றுக் கொண்டார். இதேவேளை, இலங்கை அணியின் தலைவர் லசித் மாலிங்க, ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்களைக் கைப்பற்றியவர்களின் பட்டியலில் 11ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ரொஸ் டெய்லர் மற்றும் ஹென்றி நிக்கலஸ் ஜோடி 154 ஒட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றது. இது, நியூஸிலாந்து அணி வீரர்கள் இருவர் இலங்கை அணிக்கு எதிராக பெற்றுக்கொண்ட அதிகூடிய இணைப்பாட்டமாகும். ஆட்டமிழக்காமல் இறுதி வரை களத்தில் நின்ற ஹென்றி நிக்கலஸ், தனது கன்னிச் சதத்தை பூர்த்திசெய்து 124 ஓட்டங்களை விளாசினார். பந்துவீச்சில் லசித் மாலிங்க 3 விக்கெட்களை வீழ்த்தினார். 365 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பில் நிரோஷன் திக்வெல்ல மற்றும் தனஞ்சய டி சில்வா ஆகியோர் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினர். இந்தநிலையில், தனஞ்சய டி சில்வா 36 ஓட்டங்களை பெற்றதோடு, குசல் ஜனித் பெரேரா மற்றும் நிரோஷன் திக்வெல்ல ஜோடி இரண்டாம் விக்கெட்டுக்காக 41 ஓட்டங்களைப் பகிர்ந்தது. குசல் மெண்டிஸ் ஓட்டமின்றி ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கய திசர பெரேரா தனது 10 ஆவது ஒருநாள் அரைச்சதத்தை பூர்த்திசெய்ததுடன் 80 ஓட்டங்களை பெற்றார். இலங்கை அணி, 6 விக்கெட்களை இழந்து 249 ஒட்டங்களை பெற்றிருந்தபோது, மீதமுள்ள 4 விக்கெட்களும் மேலதிக ஓட்டங்களை பெறாமலேயே வீழ்த்தப்பட்டன. இலங்கை அணி 41.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்தது. பந்துவீச்சில் லொகி பர்கியூசன் 4 விக்கெட்களையும் இஷ் சோதி 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.