அரச செலவீனம் 4000 பில்லியனைக் கடந்தது

இந்த வருடத்திற்கான அரச செலவீனம் 4000 பில்லியனைக் கடந்தது

by Staff Writer 08-01-2019 | 8:21 PM
Colombo (News 1st) இந்த வருடத்தில் அரசாங்கத்தின் மொத்த செலவு 4,470 பில்லியன் ரூபா என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த செலவு மதிப்பீட்டிற்கு நேற்று (07) கூடிய அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரசாங்கத்தின் செலவு மதிப்பீடு மற்றும் கடன் பெறுவதற்கான வரையறை என்பன உள்ளடங்கிய ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தை அமைச்சரவையில் சமர்ப்பித்தல், அரசாங்கத்தின் ஆவணத்தை நிறைவேற்றுவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாகும். இதற்கமைய, நேற்று சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தில் அரசாங்கத்தின் செலவில், கடன் செலுத்துவதற்காக 2,200 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது இலங்கை வரலாற்றில் வருடமொன்றில் கடன் செலுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட அதிகூடிய தொகை என நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 2019ஆம் ஆண்டில் அரச வருமானத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியை 15 வீதம் வரை அதிகரித்தல் அரசாங்கத்தின் இலக்காகும். இதன்படி, இந்த வருட வரவு செலவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.8 வீதமாக அமையும் என நிதி அமைச்சு மதிப்பீடு செய்துள்ளது. இந்த செலவு மதிப்பீடு உள்ளடங்கிய வரவு செலவுத் திட்டம் மீதான முதல் வாசிப்பிற்கான 2019 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டு சட்டமூலம் பெப்ரவரி 5 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.