லசந்த விக்ரமதுங்க கொலையுண்டு ஒரு தசாப்தம்: நீதி நிலைநாட்டப்படுமா?

லசந்த விக்ரமதுங்க கொலையுண்டு ஒரு தசாப்தம்: நீதி நிலைநாட்டப்படுமா?

எழுத்தாளர் Staff Writer

08 Jan, 2019 | 9:31 pm

Colombo (News 1st) இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் இன்று போன்றதொரு நாளில் இலங்கையின் ஊடக சுதந்திரத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை நியூஸ்ஃபெஸ்ட் மீட்டிப் பார்க்கிறது.

2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி சூரியோதயத்தின் பின்னரான சில நிமிடங்களில் எவரும் எதிர்பாராத செய்தியொன்று வெளியானது.

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க மீது தாக்குதல் நடத்தப்பட்ட செய்தியே அது.

வீட்டிலிருந்து அலுவலகம் நோக்கிப் பயணித்த விக்ரமதுங்க மீது தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

லசந்த விக்ரமதுங்க களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டாலும், அவரின் உயிரைக் காப்பாற்ற முடியாமற்போனது.

ஊழல், மோசடி தொடர்பில் எவருக்கும் ஒருபோதும் அஞ்சாத லசந்த விக்ரமதுங்க பல அச்சுறுத்தல்களை எதிர்நோக்கியிருந்தார்.

அந்தக் குரலை மௌனிக்கச் செய்தவர்களை சட்டத்தின் முன் நிறுத்துமாறு விடுக்கப்பட்டு வரும் கோரிக்கை இதுவரை நிறைவேற்றப்படவில்லை.

துப்பாக்கிச்சூட்டில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டமையால் அவர் உயிரிழந்துள்ளதாக அண்மையில் மீண்டும் அவரது உடல் வௌியே எடுக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் போது தெரியவந்தது.

கொலை இடம்பெற்று சில மாதங்கள் கடந்த நிலையில், குற்றவாளிகள் தொடர்பில் தீர்மானமிக்க தகவல்களை வெளியிட்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர், ஜேசுதாசன் என்பவரை நுவரெலியாவில் கைது செய்தனர்.

பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தும் வகையில், ஜேசுதாசன் சிறைச்சாலைக்குள் வைத்து மர்மமாக கொலை செய்யப்பட்டார்.

இதன் பின்னர் லசந்த விக்ரமதுங்கவின் கொலை தொடர்பிலான விசாரணை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திலிருந்து மீளப்பெறப்பட்டது.

ஜனவரி 8 ஆம் திகதி புரட்சியின் போது, ஜனநாயகத்தை நிலைநாட்டுவதாக வாக்குறுதியளித்த பலர், அதிகாரத்திற்கு வந்ததன் பின்னர் கொலையாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதாக உறுதியளித்தனர்.

கொலை தொடர்பான விசாரணை மீண்டும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு ஒப்படைக்கப்பட்டதுடன், கொழும்பு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டிருந்த அவரின் பூதவுடல் தோண்டியெடுக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றன.

எனினும், கொலையுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் யார் என்பது இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

ஒரு தசாப்தம் கடந்துள்ள நிலையில், லசந்த விக்ரமதுங்கவின் கல்லறைக்கருகிலிருந்து நீதியை வலியுறுத்த வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்