உடன்படிக்கையால் அரசகொள்முதல் செயற்பாட்டில் சிக்கல்

சிங்கப்பூர் உடன்படிக்கையினால் அரச கொள்முதல் செயற்பாட்டில் சிக்கல்

by Staff Writer 06-01-2019 | 7:26 AM
Colombo (News 1st) சிங்கப்பூர் உடன்படிக்கை காரணமாக எதிர்காலத்தில் அரச கொள்முதல் செயற்பாடுகளுக்கும் சிக்கல் ஏற்படும் என தொழிற்சங்கவாதிகளின் தேசிய முன்னணி தெரிவித்துள்ளது. இதனால், உள்நாட்டுக் கைத்தொழிலாளர்கள் பாரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும் என, முன்னணியின் பொருளாளர் கலாநிதி சுனில் பீ லியனஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு நிர்மாணத்துறையினர் 500 மில்லியன் விலைமனு கோரும்போது, முன்னுரிமை வழங்க வேண்டும் என, 1988 ஆம் ஆண்டு அப்போதைய நிதி அமைச்சின் செயலாளர், அமைச்சரவை பத்திரமொன்றில் கைச்சாத்திட்டார். சிங்கப்பூர் உடன்படிக்கையில் அதனை ஒரு பில்லியனாக அதிகரித்துள்ளனர். நிர்மாணத்துறையில் இலங்கையிலுள்ள திட்டங்களை பார்க்கும்போது, இந்த சிங்கப்பூர் உடன்படிக்கையின் ஊடாக எமது பாரியளவிலான நிர்மாணங்களை முன்னெடுப்போர் பாரிய சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை நிர்மாணத்துறையில் ஒரு பில்லியன் அல்ல அதனை விட குறைவான திட்டங்களுக்காகவும் சர்வதேச நிறுவனங்கள் தற்போது போட்டியிடுகின்றன. போட்டியிட்டு குறைந்த விலைக்கே இவற்றை பெற்றுக்கொள்கின்றனர். அரசாங்கத்தின் மாடிவீட்டுத் திட்டமொன்றுக்கான விலைமனு செயற்பாட்டில் அண்மையில் கொழும்பில் நான் ஈடுபட்டிருந்தேன். இலங்கையின் நிறுவனங்கள் குறைந்த கட்டணங்களை முன்வைத்திருந்தன. எனினும், 200 மில்லியனை அதிகமாக வழங்கி, அந்த திட்டம் சீன நிறுவனத்திற்கே வழங்கப்பட்டது. அந்தத் திட்டத்தினை முன்னெடுக்க குறித்த சீன நிறுவனம் அவர்களின் ஊழியர்களையே ஈடுபடுத்துவார்கள். அத்துடன், பொருட்களையும் அங்கிருந்தே கொண்டுவருவார்கள். குறைந்தபட்சம் எமது நாட்டின் தொழில்நுட்பத்தையேனும் பயன்படுத்த மாட்டார்கள். எனினும், உள்நாட்டு நிறுவனமொன்றை எடுத்துகொண்டால், உள்நாட்டிலுள்ள ஊழியர்கள், பொறியியலாளர்கள், மனை வடிவமைப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதுடன், எமது நாட்டின் நிர்மாணத்துறையின் மனிதவள விருத்தி ஏற்படும். எனினும், இந்த உடன்படிக்கை ஊடாக அது முற்றாக இல்லாமல் போகும் என தொழிற்சங்கவாதிகளின் தேசிய முன்னணியின் பொருளாளர், கலாநிதி சுனில் பீ. லியன ஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.