2ஆம் கட்ட மதிப்பீடு காரணமாக 4 பாடசாலைகள் மூடல்

சாதாரணதர பரீட்சையின் 2ஆம் கட்ட மதிப்பீடு: 4 பாடசாலைகள் மூடப்படவுள்ளன

by Staff Writer 06-01-2019 | 9:47 AM
Colombo (News 1st) கல்விப்பொதுத்தரதர சாதாரணதரப் பரீட்சையின் 2ஆம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக, 4 பாடசாலைகள் நாளை மறுதினம் (08) முதல் மூடப்படவுள்ளன. எதிர்வரும் 17 ஆம் திகதி வரை குறித்த பாடசாலைகள் மூடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு இசிப்பத்தன கல்லூரி, மாத்தறை மஹானாம மகா வித்தியாலயம், களுத்துறை சி.டபிள்யூ.டபிள்யூ கன்னங்கர கல்லூரி, கண்டி புனித அந்தோனியார் மகளிர் பாடசாலை ஆகிய பாடசாலைகள் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக மூடப்படவுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித குறிப்பிட்டுள்ளார். மேலும், 21 பாடசாலைகளில் மதிப்பீட்டுப் பணிகள் நடைபெறவுள்ளதுடன், பாடசாலைகளின் ஒரு பகுதி மாத்திரம் மதிப்பீட்டு நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. குறித்த மதிப்பீட்டு பணிகளில் 3,500 அதிகாரிகள் ஈடுபடவுள்ளனர். அதேநேரம், தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15 ஆம் திகதி, தமிழ்மொழி மூலமான மத்திய நிலையங்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. சாதாரணதரப் பரீட்சையின் முதலாம் கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் 23 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.