நிதியுதவி அளிக்காத சட்டமூலத்துக்கு அனுமதி இல்லை

தடுப்புச்சுவர் திட்டத்துக்கு நிதியுதவி அளிக்காத எந்தவொரு சட்டமூலத்துக்கும் அனுமதியில்லை - ட்ரம்ப்

by Staff Writer 05-01-2019 | 4:10 PM
அமெரிக்க அரசபணிகளை ஒரு வருடத்திற்கும் கூடுதலாக முடக்கி வைப்பதற்குத் தாம் தயாராக இருப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச்சுவர் அமைக்கும் ட்ரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க காங்கிரஸ் மறுத்து வருவதால், பல்வேறு அரசதுறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதிச்சட்டமூலம் நிறைவேற்றப்படாமல் அரசபணிகள் முடங்கியுள்ளன. மூன்றாவது வாரமாகத் தொடரும் இந்த அரசபணி முடக்கம் ஒரு வருடமோ அதற்கு மேலாகவோ தொடருமானால், அதற்கும் தாம் தயாராக இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மேலும், காங்கிரஸின் தடைகளை மீறி, அமெரிக்க - மெக்ஸிகோ எல்லையில் தடுப்புச்சுவர் அமைப்பதற்கு, தம்மால் நாட்டில் தேசிய அவசரகாலநிலையை பிரகடனப்படுத்த முடியுமெனவும் ஜனநாயகக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களைச் சந்தித்த பின்னர், ஜனாதிபதி ட்ரம்ப் சூளுரைத்துள்ளார். அத்துடன், தமது தடுப்புச்சுவர் திட்டத்துக்கு நிதியுதவி அளிக்காத எந்தவொரு சட்டமூலத்துக்கும் தாம் அனுமதியளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, அரசபணிகள் முடங்கியுள்ளதன் காரணமாக 8 இலட்சம் அரசபணியாளர்களுக்கு கடந்த டிசம்பர் மாதம் 22 ஆந் திகதியிலிருந்து சம்பளம் வழங்கப்படவில்லை எனவும் அந்நாட்டில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.