அடுத்த வாரத்தில் மஹிந்த கடமைகளை பொறுபேற்பார்

எதிர்வரும் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை மஹிந்த ராஜபக்ஸ கடமைகளைப் பொறுப்பேற்பார் - மஹிந்த அமரவீர

by Staff Writer 04-01-2019 | 9:18 PM
Colombo (News 1st) எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கான சலுகைகளை மஹிந்த ராஜபக்ஸவுக்கு வழங்குமாறு, சபாநாயகர் கரு ஜயசூரிய கட்சித் தலைவர்களுக்கு பாராளுமன்றத்தில் இன்று (04) அறிவித்துள்ளார். சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கட்சித்தலைவர்கள் கூட்டம், பாராளுமன்ற கட்டடத்தொகுதியில் இன்று நடைபெற்றது. ஒதுக்கீட்டு சட்டமூலம் எனப்படும், 2019 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் முதற்பகுதியை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், எதிர்வரும் மார்ச் மாதம் 5 ஆம் திகதி வரவுசெலவுத் திட்ட உரை இடம்பெறவுள்ளது.
மஹிந்த ராஜபக்ஸவுக்கு அந்த சந்தர்ப்பத்தை வழங்குமாறு நாம் வேண்டுகோள் விடுத்தோம். அதற்கு சபாநாயகர் இணக்கம் தெரிவித்தார். அதற்கமையை எதிர்க்கட்சித் தலைவரின் செயலாளரை நான் சந்தித்து, சபாநாயகரின் ஆலோசனைகளைக் கூறினேன். இன்று முதல் எதிர்க்கட்சித் தலைவருக்கு அந்த பொறுப்புக்களை ஒப்படைக்க செயலாளர் சம்மதம் தெரிவித்தார். அதற்கமையை, எதிர்வரும் திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகம் மற்றும் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் கடமைகளை மஹிந்த ராஜபக்ஸ பொறுப்பேற்பார் என எதிர்க்கட்சியின் பிரதமர கொறடா மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கேள்வி - முன்னாள் எதிர்க்கட்சித் தலைவரை நீக்கும் கடிதத்தை சபாநாயகர் அனுப்பியுள்ளாரா? பதில் - அது தொடர்பில் எமக்கு அறிவிக்கப்படவில்லை. இதற்கு அப்பால் தீர்மானமொன்றை எடுப்பதாயின், நீதிமன்றத்தின் ஊடாகவே அந்த செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என அவர் கூறினார். கேள்வி - பாராளுமன்றம் கூடிய பின்னர் இது தொடர்பில் பிரச்சினை ஏற்படாது என நீங்கள் எண்ணுகின்றீர்களா? பதில் - இல்லை. அரச தரப்பினரும் அங்கிருந்தனர். அவர்கள் எதிர்ப்புத் தெரிவித்து சில கருத்துக்களை முன்வைத்தனர். எனினும், சபாநாயகர் அவரின் உத்தரவை அறிவித்தார். அதற்கமைய நாம் செயற்படுவோம். மஹிந்த ராஜபக்ஸ சார்பில், அவரின் தனிப்பட்ட செயலாளர் இன்றைய தினம் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுத்தார். கேள்வி - மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கும்போது, பொதுஜன பெரமுனவில் அவர் உறுப்புரிமைப் பெற்றுள்ளார் என்பது தொடர்பில் அங்கு சிறிய மோதல் ஏற்பட்டது அல்லவா? பதில் - இல்லை. அது பிரச்சினையாக மாறவில்லை. கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் என்ற ரீதியில் நான் கடிதம் மூலம் அறிவித்துள்ளமையால், அவர் அந்த விடயத்தையே ஏற்றுக்கொள்வார். கேள்வி - வரவுசெலவுத் திட்டத்தை தோற்கடிக்கும் எதிர்பார்ப்புள்ளதா? பதில் - இல்லை. வரவுசெலவுத் திட்டத்தில் மக்களுக்குப் பாதிப்பை ஏற்படும் விடயங்கள் காணப்பட்டால், மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படாவிடின், அதனைத் தோற்கடிக்க நாம் முயற்சிப்போம். நாடு குழப்பமடையும் எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்க நாம் எதிர்பார்க்கவில்லை. கேள்வி - மத்திய செயற்குழுவின் ஊடாக, உங்களிடம் இருந்து சென்றவர்கள் தொடர்பில் எவ்வாறான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கவுள்ளீர்கள்? பதில் - இல்லை. அது தொடர்பில் கலந்துரையாடப்படவில்லை. கேள்வி - உங்களுடன் மீண்டும் இணையவுள்ளதாக விஜித் விஜியமுனி சொய்சா கூறுகின்றாரே? பதில் - ஆம். இணைந்தால் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வோம். என இதன்போது ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மஹிந்த அமரவீர இவ்வாறு பதிலளித்துள்ளார்.